பதற வேண்டாம்... ஆனால் இதை கண்டிப்பா செய்யுங்க! 'முரசு' புயலில் இருந்து தப்பிக்க அரசின் அவசர வழிகாட்டுதல்கள்!

 
Q

தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை (TNDRRA), வருவாய் நிர்வாக மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் சந்தர மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

“இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் ‘முரசு’ புயல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது புயல் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை நோக்கி நகர்கிறது. இருப்பினும், அடுத்த சில நாட்களுக்கு வடக்கு தமிழ்நாட்டில் கனமழை, பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் மிக கொந்தளிப்பாக காணப்படும். இதனால் பதற்றமடையத் தேவையில்லை; ஆனால் அனைவரும் விழிப்புடன் இருந்து, எளிய நடைமுறை முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்திக்குறிப்பில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்த பொது அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

செய்ய வேண்டியவை (மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்)

✔ கடலோரச் சாலைகள் மற்றும் கடல் சுவர்களிலிருந்து விலகி இருங்கள்: உயர் அலைகளும் கடல் கொந்தளிப்பும் கடலோரச் சாலைகளில் (ECR, OMR போன்றவை) நீர் தெறிக்கச் செய்யலாம். எனவே கடற்கரை நடைபாதைகளிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருங்கள்.

✔ நீர் தேங்கிய இடங்களைத் தவிருங்கள்: நீரின் ஆழம் தெரியாத நீர் தேங்கிய சாலைகள் மற்றும் தாழ்வான சுரங்கப்பாதைகளில் நடக்கவோ வாகனம் ஓட்டவோ வேண்டாம்.

✔ அத்தியாவசியப் பொருட்களைத் தயாராக வைத்திருங்கள்: போதுமான குடிநீர், தேவையான மருந்துகள், அவசர விளக்குகள்/டார்ச் லைட்கள், பவர் பேங்குடன் சார்ஜ் செய்த கைப்பேசிகள் ஆகியவற்றை வீட்டில் வைத்திருங்கள்.

✔ தளர்வான பொருட்களைப் பாதுகாப்பாக வையுங்கள்: மழைநீர் தடையின்றி வெளியேற மாடி மற்றும் பால்கனி வடிகால் வாய்களைச் சுத்தம் செய்யுங்கள். பலத்த காற்றில் பறந்து செல்லக்கூடிய, பொருத்தப்படாத தகரத் தகடுகள், விளம்பரப் பலகைகள் அல்லது எடை குறைந்த வெளிப்புறப் பொருட்களைப் பாதுகாப்பாகக் கட்டி வையுங்கள்.

✔ அதிகாரப்பூர்வ வானிலைச் செய்திகளைப் பின்பற்றுங்கள்: TNDRRA, IMD மற்றும் உங்கள் மாவட்ட ஆட்சியரின் உறுதிசெய்யப்பட்ட தகவல்களை மட்டுமே நம்புங்கள்.

✔ அவசரகால எண்களைக் கையில் வைத்திருங்கள்:

மாநில அவசர உதவி எண்: 1070

மாவட்ட அவசர உதவி எண்: 1077

செய்யக் கூடாதவை (தவிர்க்க வேண்டியவை)

✖ கடற்கரைகள் அல்லது கடலோரச் சாலைகளுக்குச் செல்ல வேண்டாம்: கடல் கொந்தளிப்பாக இருக்கும் நேரத்தில் பொழுதுபோக்கு, புகைப்படம் எடுத்தல் அல்லது சுற்றிப்பார்ப்பதற்காகக் கடற்கரை, துறைமுக நடைமேடை அல்லது கடலோரச் சாலைகளுக்குச் செல்ல வேண்டாம்.

✖ கடலுக்குள் செல்ல வேண்டாம்: மீனவர்கள் நவம்பர் 4 காலை வரை கடலுக்குள் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

✖ மின் கம்பங்கள் அல்லது மின் கம்பிகளைத் தொட வேண்டாம்: ஈரமான மற்றும் காற்று வீசும் வானிலையில் தெருவிளக்குகள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் அறுந்து விழுந்த மின் கம்பிகளிலிருந்து விலகி இருங்கள்.

✖ பலவீனமான அல்லது பாதுகாப்பற்ற கட்டடங்களில் தங்க வேண்டாம்: பாதுகாப்பற்ற கூரைகள், பலவீனமான குடிசை வீடுகள் அல்லது இடிந்து விழும் நிலையிலுள்ள கட்டடங்களில் தங்குவதைத் தவிருங்கள். அறிவுறுத்தப்பட்டால், உள்ளூர் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பான முகாம்களுக்குச் செல்லுங்கள்.

✖ சரிபார்க்கப்படாத வதந்திகளைப் பகிர வேண்டாம்: அதிகாரப்பூர்வமற்ற பீதியூட்டும் செய்திகளையோ சரிபார்க்கப்படாத வானிலை வதந்திகளையோ சமூக ஊடகங்களில் பகிரவோ பகிர்ந்து அனுப்பவோ வேண்டாம்

என அதில் கூறியுள்ளார்.