மிஸ் பண்ணிடாதீங்க! - ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் கண்ணகி கோயில் திருவிழா..!

 
1

மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா ஆண்டுதோறும், சித்திரை மாதம் முழு நிலவு அன்று தேனி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள வண்ணாத்திப்பாறையில்  கண்ணகி விண்ணுலகம் சென்றதாக கருதப்படும் மலை உச்சியில், சேரன் செங்குட்டுவ மன்னரால் அமைக்கப்பட்ட கோயிலில்  தேனி மற்றும் இடுக்கி மாவட்ட மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், "கண்ணகி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கடந்த முறை போலவே, இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சுலபமாக கோயிலுக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

திருவிழா தினத்தன்று மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆகையால், பக்தர்களும், பொதுமக்களும் அதிகாரிகளின் வழிநடத்தலுக்கு ஒத்துழைப்பு தந்து பாதுகாப்பாக செல்ல வேண்டும். மேலும், நீதிமன்றத்தின் உத்தரவின் படி, கண்ணகி கோயில் அறக்கட்டளை பெயரில் தனி நபர்களோ, அமைப்பினரோ வசூலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் எச்சரித்தார்.

அப்போது, இந்து அமைப்பினர் சார்பில், "கேரளம் மாநிலம் வழியாக கோயிலுக்கு வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஆகையால், கூடலூர் அருகே பனியங்குடி வழியாக 7 கிமீ தூரம் சாலை வசதி ஏற்படுத்தினால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுலபமாக வந்து போக முடியும். மேலும், குறைவான நேரம் மட்டுமே வழிபாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நேர கட்டுப்பாட்டை சற்றே அதிகரித்து தர வேண்டும்" என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.