மிஸ் பண்ணிடாதீங்க! ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
2026-2027 ஆம் கல்வியாண்டிற்காக, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் / அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்திற்கும், சித்தா (BSMS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஓமியோபதி (BHMS) மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (BNYS) மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) தகுதியான நபர்களிடமிருந்து (ஒவ்வொரு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தனித்த விண்ணப்பங்கள்) உரிய தகவல் தொகுப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வரவேற்கப்படுகின்றன.
பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் / பி.என்.ஒய்.எஸ். மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான உரிய தகவல் தொகுப்பேட்டினை "www.tnayushselection.org" கொள்ளலாம். என்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழியிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இளநிலை ஆயுஷ் மருத்துவப் பட்டப்படிப்புகளான சித்தா (BSMS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS) மற்றும் ஓமியோபதி (BHMS) ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, தேசியத் தேர்வு முகமையால் (National Testing Agency NTA) நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை) (NEET (UG) 2026-ல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், முழுமையாகத் தகுதி வரிசை (Merit) அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (BNYS) மருத்துவப் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, உரிய தகவல் தொகுப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி நிபந்தனைகளின்படி, மேல்நிலைப் பள்ளி (+2) பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், முழுமையாகத் தகுதி வரிசை (Merit) அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnayushselection.org என்ற வலைதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- படிப்புப் பிரிவு : சித்தா (BSMS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஓமியோபதி (BHMS) மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (BNYS)
- படிப்பிற்கான காலம் : 5 1/2 ஆண்டுகள்
- படிப்பிற்கான கல்வித்தகுதி : 10+2 (அறிவியல் பாடங்களில் தேர்ச்சி) / NEET- 2026 (UG)
கல்லூரிகளின் விவரங்கள்
| கல்லூரிகள் | இருக்கைகள் |
| அரசு சித்தா மருத்துவக் கல்லூரிகள்-02 | இருக்கைகள்-160 |
| அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி-01 | இருக்கைகள்-60 |
| அரசு யுனானி மருத்துவக் கல்லூரி-01 | இருக்கைகள்-60 |
| அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி-01 | இருக்கைகள்-50 |
| அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள்-02 | இருக்கைகள்-160 |
| சுயநிதி சித்தா மருத்துவக் கல்லூரிகள்-13 | இருக்கைகள்-820 |
| சுயநிதி ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரிகள்-05 | இருக்கைகள்-270 |
| சுயநிதி ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள்-11 | இருக்கைகள்-900 |
| சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் | இருக்கைகள் 1900 |
இணையவழி விண்ணப்பக் கட்டணம்
- அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அகில இந்திய நிர்வாக ஒதுக்கீட்டு OC, BC, BCM, MBC/DNC பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்
- SC, SCA & ST பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- அகில் இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் (அனைத்து பிரிவினர்) ரூ.1,000 செலுத்த வேண்டும்.
- நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் (அனைத்து பிரிவினர்) ரூ.5,500 செலுத்த வேண்டும்.
- சிறப்பு பிரிவு விண்ணப்பதாரர்கள். விண்ணப்பிக்கும் ஒவ்வொரு சிறப்பு பிரிவிற்கும் ரூ.100/- கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க பதிவு நீட்டிப்பு
2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி & யோகா மற்றும் இயற்கை மருத்துவம் – மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

