என் திருமணத்திற்கு மொய் வைக்க வேண்டாம்... அதற்கு பதில் தேர்தலில் பிரதமர் மோடிக்கு...

 
1

தெலுங்கானாவை சேர்ந்த  ஒருவர், தனது மகனின் திருமண அழைப்பிதழில், திருமணத்துக்கு  யாரும் பரிசு பொருட்கள் வழங்க வேண்டாம் எனவும், அதற்கு பதில், தேர்தலில் பிரதமர் மோடிக்கு (பா.ஜ.க.) வாக்களியுங்கள் என்றும் அச்சிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த திருமணப் பத்திரிக்கை தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இது குறித்த விவரம் வருமாறு:

தெலுங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நந்திகண்டி நரசிம்முலு. இவரது மகன் சாய் குமாருக்கும், மஹிமாராணி என்பவருக்கும் வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக திருமண அழைப்பிதழ்கள் மணமகன் வீட்டு சார்பில் அச்சிடப்பட்டது. 

அதில், அழைப்பிதழின் மேல் அட்டையின் மீது, பிரதமர் மோடியின் படம் அச்சிடப்பட்டுள்ளது.  அந்த திருமண அழைப்பிதழில், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிப்பதே இந்த திருமணத்திற்கு நீங்கள் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசாகும். வேறு பரிசு வேண்டாம் என எழுதப்பட்டுள்ளது. இந்த திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து நந்திகண்டி நரசிம்முலு கூறும் போது, நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். பிரதமர் மோடிக்கு வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கூற எனது மகனின் திருமண விழாவினை  பயன்படுத்தி கொள்ள முடிவு செய்தேன். அதன்படி, திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள் என்று அச்சிட்டேன் என்றார்.