வாக்காளர் அட்டை இல்லையா? கவலை வேண்டாம்... நீங்களும் ஓட்டு போடலாம்..!
உலகம் முழுவதும் ஓட்டு போடுவது என்பது அனைவரின் கடமையாகும். 18 வயது நிரம்பியவர்கள் கட்டாயம் ஓட்டு போட வேண்டும். ஆனால் சிலரிடம் வாக்காளர் அட்டை இல்லாமல் இருக்கும். அப்படி இருக்கவர்களும் ஓட்டு போடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் ஓட்டளிக்க செல்லும் போது ஓட்டு சாவடியில், தங்கள் அடையாளத்தை மெய்ப்பிக்க வாக்காளர் அட்டையை காண்பிக்க வேண்டும்.அதை காண்பிக்க இயலாதவர்கள், ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி மற்றும் தபால் கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக மருத்துவ காப்பீட்டு அட்டை போன்றவற்றை காண்பிக்கலாம்.
இது தவிர ஓட்டுனர் உரிமம், பான்கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ், இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, பாஸ் போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், எம்பி., எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைசகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை போன்றவற்றில் ஏதோ ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
தேர்தல் கமிஷன் சார்பில் வழங்கப்படும் பூத் சிலிப் அடையாள அட்டையாக ஏற்று கொள்ளப்படாது. ஒரு தொகுதி வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வேறொரு தொகுதியில் அடையாள அட்டையாக காண்பிக்கலாம். ஆனால் அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையில் சிறு எழுத்து பிழைகள் இருந்தாலும் அதை பெரிதுபடுத்தாது வாக்காளர்கள் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை புகைப்படத்தில் மாற்றம் இருந்தால், சம்பந்தப்பட்ட புகைப்பட ஆவணத்தைக் காட்ட வேண்டும்.

