நாளை மகாளய அமாவாசை - மறந்தும் இதையெல்லாம் செய்யாதீங்க...!!

 
1

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு மிக முக்கியமான வழிபாடு செய்யும் காலமாக கருதப்படுகிறது. இந்த நாளில், நம்முடைய முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாகவும், அவர்கள் நம்முடைய வழிபாட்டை ஏற்றுக்கொண்டு ஆசி வழங்குவதாகவும் நம்பப்படுகிறது.

மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. பித்ரு தர்ப்பணம் செய்தால் நமது முன்னோர்கள் சிறுவயதில் இறந்தவர்கள், பிறந்த உடன் இறந்த குழந்தைகள், துர்மரணம் ஆனவர்களுக்கு நல்ல கதி கிடைக்கும். இத்தகைய சிறப்புமிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்தால் நல்ல பலன்களை அடையலாம்.

கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததற்கு சமம். எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.

பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது. பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்திக்கீரையை உணவாக அளிக்கலாம். பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம். அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். அனைவரும் ஒரேநாளில் அகத்திக்கீரை தருவதால் பசுவிற்கு சலிப்பு ஏற்பட்டு அகத்திக்கீரையை உண்ண மறுக்கிறது. எனவே, அகத்திக்கீரைக்கு பதிலாக கோதுமை தவிடு, அரிசி தவிடு, புண்ணாக்கு போன்றவையும் அமாவாசை அன்று தானம் செய்யலாம்.

தானம் செய்ய ஏற்ற எளிதாக சமைக்கும் வகையில் கத்தரி, அவரை, பீன்ஸ், வெண்டை, உருளை, கேரட், பீட்ரூட், முருங்கை, கோஸ், வாழைக்காய், முழுபூசணி போன்றவற்றை தானம் தருதல் நன்று. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்ம வினைகளை போக்கிக் கொள்ள முடியும்.

எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் :

  • அன்னம் - வறுமையும், கடன் தொல்லைகளும் நீங்கும்
  • தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்
  • தீபம் - கண்பார்வை தெளிவடையும்
  • அரிசி - நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்களை போக்கும்
  • நெய் - நாட்பட்ட தீராத நோய்களை போக்கும்
  • பால் - துக்கம் நீங்கும்
  • பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்
  • தேங்காய் - நினைத்த காரியம் வெற்றியாகும்
  • நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்

அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் என்பது நம் பிதுர்களை மகிழ்விக்கும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிடைக்கும். நமது குலம் தழைக்கும்.

சாதாரண அமாவாசை நாட்களில் மூன்று தலைமுறை முன்னோருக்குத் தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால் மஹாளயபட்ச அமாவாசை நாளில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனிப்பெருஞ் சிறப்பாகத் திகழ்கிறது. அதேபோல் மகாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், ஏழேழு ஜென்ம பாவங்களும் போகும் என்பது ஐதீகம். எனவே, மகாளய அமாவாசை அன்று கண்டிப்பாக, முன்னோர்களுக்கு, இறந்தவர்கள் ஆன்மா திருப்தி அடைய திதி கொடுக்க வேண்டும்.

தர்ப்பணம் கொடுக்க சிறந்த இடங்கள் :

நதிகள் சங்கமிக்கும் இடங்கள், கடல்கள், புனித நதிகள் பாயும் கரைகள் ஆகியவற்றில் தர்ப்பணம் செய்வது பல மடங்கு பலன் தரும். முன்னோர்களின் பசியையும் தாகத்தையும் போக்கவும், அவர்களின் ஆசிகளைப் பெறவும் எள் கலந்த தண்ணீர் கொண்டு தர்ப்பணம் செய்யப்படுகிறது.

சென்னையில் தர்ப்பணம் கொடுக்க மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகள், சிவன் கோவில்களில் உள்ள குளக்கரைகள் தர்ப்பணம் கொடுக்க சிறந்த இடங்களாகக் கருதப்படுகின்றன.

நாளை நடைபெற உள்ள மகாளய அமாவசை நாளில், நாம் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பன குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

செய்யக்கூடாதவை :

* அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக் கூடாது.

* மகாளய அமாவாசை அன்று போதைப்பொருட்கள், மது, புகை பழக்கம் கூடாது.

* வீட்டில் அவைசம் செய்யவோ சாப்பிடவோ கூடாது. மீதமான உணவுகளை சாப்பிடக் கூடாது.

* நாம் சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக்கூடாது.

* நகம் மற்றும் முடியை வெட்டக்கூடாது.

* யாரிடமும் கோபப்படவோ, அடிக்கவோ, தகாத வார்த்தைகளை பயன்படுத்தவோ கூடாது.

* நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது எள்ளை கடனாக வாங்கி தர்ப்பணம் செய்யக்கூடாது.

* தர்ப்பணம் கொடுக்கும் போது ராகு காலம், எமகண்டம் போன்றவற்றை பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் முன்னோர்களுக்கு படையல் போடும் போது ராகு காலம், எமகண்டம் இருக்கக்கூடாது.

* முன்னோர்கள் வழிபாடு முடியும் வரை வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றக்கூடாது.

* சுமங்கலி பெண்கள், பெண் பிள்ளைகள் பெற்றோருக்காக எள்ளும் தண்ணீரும் இறைத்து பிண்டம் வைக்கக்கூடாது.

செய்ய வேண்டியவை :

* அமாவாசைக்கு முதல் நாளே வீட்டை சுத்தமாக கழுவி விடவேண்டும்.

* மகாளய அமாவாசை அன்று அதிகாலை சீக்கிரமாகவே எழுந்து சுத்தமான நீரில் நீராடிய பின்னர் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பின்னர் வீட்டில் விளக்கு ஏற்றி முன்னோர்களுக்கு உணவு படைத்து வழிபாடு செய்த பின்னர் காகத்திற்கு கிழக்கு பார்த்தவாறு சாதம் வைத்து, பிறகு நீர் விலவி அதை காகம் எடுத்த பிறகு தான் நாம் சாப்பிட வேண்டும். ஏனெனில் காகமாக வந்து நம் முன்னோர்கள் நம்முடைய வழிபாட்டை ஏற்றுக்கொண்டு நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்பது ஐதீகம்.

* ஏழை எளிய மக்களுக்கு உங்களால் முடிந்த பொருளுதவி மற்றும் தானங்கள் செய்ய வேண்டும். பசி என வருபவர்களுக்கு முடிந்த வரையில் சாப்பாடு போடவேண்டும்.

* மகாளய அமாவாசை அன்று முறைப்படி பித்ருக்கடன் செய்வது, பித்ரு தோஷம், சாபம் ஆகியவற்றைப் போக்கும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், வஸ்திர தானம் அளித்து, பசுக்கள், நாய்கள் மற்றும் காகங்களுக்கு உணவளிக்க வேண்டும், இதைச் செய்தால் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அதாவது ஏதேனும் இரு ஜீவராசிகளுக்கு கண்டிப்பாக அன்னதானம் கொடுக்க வேண்டும்.

* உங்களிடம் உங்களுடைய முன்னோர்கள் படம் இல்லை என்றால் தெற்கு பார்த்தவாறு ஒரு அகல் விளக்கு மட்டும் ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம்.

* மகாளய அமாவாசை அன்று மாலை 6 மணிக்கு மேல் உங்கள் வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று முன்னோர்களை வேண்டி ஒரு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

* மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாட்டை முடித்த பின்னர் நீங்கள் போகக்கூடிய தூரத்தில் குலதெய்வம் கோவில் இருந்தால் அங்கு சென்று வழிபாடு செய்தால் குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும். அப்படி அருகில் குலதெய்வம் கோவில் இல்லாதவர்கள் வீட்டிலேயே குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்யலாம்.