இனி காரை ஓட்ட வேண்டாம்...பறக்கலாம்...பறக்கும் காரை அறிமுகப்படுத்தியது டெஸ்லா..!!
எலான் மஸ்க்கின், 'டெஸ்லா' நிறுவனம், மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில், பறக்கும் திறன் உடைய, 'ரோட்ஸ்டர்' என்ற புதிய காரை நேற்று அறிமுகப்படுத்தியது.
இந்தக் கார் சாலையில் அதிவேகமாகச் செல்வதுடன், காற்றிலும் மேலே எழும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் உற்பத்தி 2028ல் தொடங்கும் என நிறுவனத்தின் தலைமைச் நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்தார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஆஸ்டினில் உள்ள, 'ஸ்பேஸ்எக்ஸ்' சோதனை மையத்தில், 'ரோட்ஸ்டர்' பறக்கும் காரின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது காரின் செயல் விளக்கமும் நடந்தது. இதற்காக செங்குத்தாக மேலே சென்று உட்புறமாக திரும்பும் வகையில் பாதை அமைத்திருந்தனர்.
காரின் அடிப்பகுதியில் உறிஞ்சு விசை தொழில்நுட்பம் இருந்ததால் செங்குத்தான பாதையில் ஏறி கீழே விழாமல் தலைகீழாக சில விநாடிகள் நின்றது.பின்னர் அந்தரத்தில் சுழன்று காற்றில் சில விநாடிகள் பறந்து, அதிவேக காற்று உந்து விசை உதவியுடன் தரையிறங்கியது. இந்தச் செயல்விளக்கத்தில் காருக்குள் ஓட்டுநர் இல்லை. உயிரிழப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஓட்டுநர் இல்லாமல் சோதனை நடத்தியதாக மஸ்க் கூறினார்.
இருப்பினும், இந்தக் கார் நீண்ட தூரம் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது என்பதற்கான ஆதாரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
'ரோஸ்டர்' கார் குறித்து டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் கூறியதாவது:
'டெஸ்லா'வின் புதிய 'ரோட்ஸ்டர்' கார், பூஜ்ஜியத்தில் இருந்து 100 கி.மீ., வேகத்தை ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் எட்டும் திறன் கொண்டது. இந்தக் காரில் 10 உந்து முனைகளும், மிக உயர் அழுத்த காற்றழுத்த தொட்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவை தரையில் காரின் வேகத்தை அதிகரிக்கவும், காற்றில் மேலே எழும்பவும் உதவும்.உலகின் சிறந்த கார் தயாரிப்பு நிறுவனமும், சிறந்த ராக்கெட் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து செயல்பட்டதன் விளைவு இந்தத் தொழில்நுட்பம்.
2028ல் இந்த காரை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

