இந்த தண்ணீரை குடிக்காதீங்க .."குடிநீருக்கு உகந்தது அல்ல" - குடிநீர் வடிகால் வாரியம் கொடுத்த எச்சரிக்கை..!
வைகை அணையில் இருந்து பாசனம், குடிநீருக்கு திறக்கப்படும் நீர் பிக்கப் அணையில் தேக்கப்படுகிறது. அங்கிருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கு ஆற்றின் வழியாகவும் கால்வாய் வழியாகவும் பிரித்து அனுப்பப்படும். இதில் தேக்கப்படும் நீரே ஆண்டு முழுவதும் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு இருப்பில் இருந்த நீர் மார்ச் 20 வரை பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டதால் நீர்மட்டம் அன்றைய தினம் 33.33 அடியாக குறைந்தது. இரு மாதங்களாக போதிய மழை இன்றி தொடர்ந்து குடிநீருக்கு அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டதால் நீர்மட்டம் தற்போது 20 அடியாக குறைந்துள்ளது.
இந்நிலையில் கோவை வெப்பத்தால் வைகை அணையில் தண்ணீர் முற்றிலும் வற்றியுள்ளதால்,அணையின் அடிமட்டத்தில் தேங்கியுள்ள தண்ணீர், குடிநீருக்கு உகந்தது அல்ல என்றும் சுத்திகரிக்க முடியாத அளவிற்கு அடர்பச்சை நிறத்தில் தண்ணீர் உள்ளது என்று தேனி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் அறிக்கை அனுப்பியுள்ளது.
இதுதொடர்பான அந்த அறிக்கையில், "வைகை அணையின் அடி மட்டத்தில் உள்ள தண்ணீர் மாசடைந்து அடர்பச்சை நிறமாக மாறியுள்ளது. பல்வேறு முறைகளில் சுத்திகரிப்பு செய்தாலும் தண்ணீரை முழுமையாக சுத்தப்படுத்த முடியவில்லை. எனவே தற்போது உள்ள தண்ணீர் குடிநீருக்கு உகந்ததல்ல. மேலும் அந்த தண்ணீரை மக்கள் பயன்படுத்தினால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

