நேரில் வர வேண்டாம்: தவெக விருப்ப மனுவை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய இதோ வழிமுறை!

 
1 1
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத் தோழர்களுக்கு வணக்கம். வெற்றித் தலைவர் அவர்களின் ஆசியோடும் ஆதரவோடும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள், இன்று முதல் கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கழகத் தலைமை நிலையச் செயலகம் இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இட நெருக்கடியும் ஏற்படக் கூடாது என்பதை முழுமையாகக் கவனத்தில் கொண்டுள்ளோம். எனவே, மக்கள் மீது அதிக அக்கறை கொண்ட நம் வெற்றித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விருப்ப மனுக்களைப் பெறுவதற்காகக் கழகத் தோழர்கள் யாரும் தலைமை நிலையச் செயலகத்திற்கு வர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், விருப்ப மனுவை https://drive.google.com/file/d/1Y9PfGCXvzVTbJ6B6S128PKJZE7laWgiK இணைப்பைப் பயன்படுத்திப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த இணைப்பின் வாயிலாக விருப்ப மனுவைப் பதிவிறக்கம் செய்யலாம். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். இவற்றை ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியான பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் நேரிலோ, கொரியர் / தபால் மூலமோ அனுப்பலாம் என்று கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி கேட்டுகொள்கிறோம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று பனையூர் தவெக அலுவலகத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விருப்ப மனு பெற வந்ததால் அங்கு பெரும் மக்கள் கூட்டம் கூடியது. இதனால், தவெக சார்பில் வந்திருந்த பவுன்சர்கள், பல்வேறு இடங்களில் பேரிகாடுகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும், அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வாகனங்களை கூட தவெக நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அந்த தெருவில் வசிக்க கூடிய மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து காவல் துறையினர் அங்கு வந்து பொதுமக்களுக்கு வழிவிட வேண்டும் என தவெக நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினர். ஆனால் எந்த பயனும் இல்லாததால், அப்பகுதி பொதுமக்கள் தவெக அலுவலகம் முன்பாக வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தவெக தொண்டர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.