இதை யாரும் நம்ப வேண்டாம் - ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை!

 
1

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், தனது பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது ரஜினிகாந்தின் ‘தர்மன்’, சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’, கமல்ஹாசன் நடிக்கும் ‘சண்டியர்’ உள்ளிட்ட படங்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி சிலர் ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் எந்தப் படத்திற்கும் காஸ்டிங் ஏஜெண்ட்களை நியமிக்கவில்லை என நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

 

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்” என தெரிவித்துள்ளது.