பயப்படாதேன்னு சொல்லி காட்டு பகுதிக்கு கூட்டிட்டுப் போய்... சிறுமி வன்கொடுமை வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 17 ஆண்டுகள் சிறை..!

 
11

தென்காசி சேர்ந்த 15 வயது சிறுமி திருநெல்வேலி மாவட்டம், ராஜீவ்காந்தி நகரில் உள்ள தனது சித்தி வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில், கடந்த 2018- ஆம் ஆண்டு ஜூலை 07- ஆம் தேதி அந்த சிறுமி தனது தாயைச் சந்திப்பதற்காக சென்றிருந்தார். பின்னர் இரவு 07.00 மணியளவில் பாப்பாக்குடி செல்வதற்காக திருநெல்வேலி செல்லும் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

ஆலங்குளத்தில் இறங்கிய அந்த சிறுமி, ஆலங்குளத்தில் இருந்து முக்கூடல் வழியாக தனது சித்தி ஊரான பாப்பாக்குடி செல்லும் பேருந்திற்காகக் காத்திருந்தார். பாப்பாக்குடி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராமச்சந்திரன், பாப்பாக்குடி செல்வதற்கு பயணிகளை ஏற்றியுள்ளார். எனவே சிறுமியும் அந்த ஆட்டோவில் ஏறினார். செல்லும் வழியில் பிற பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில் இறுதியாக சிறுமி மட்டும் ஆட்டோவில் இருந்துள்ளார்.

அப்போது ராமச்சந்திரன் டாஸ்மாக் கடையில் ஆட்டோவை நிறுத்தி மதுபானம் வாங்கிவிட்டு ஆட்டோவில் சிறுமியை இருட்டு பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். ஏன் இங்கு செல்கிறீர்கள்? ஊருக்கு சொல்லுங்கள் என சிறுமி கேட்டபோது பயப்படாதே எனக் கூறி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று ராமச்சந்திரன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து முக்கூடல் காவல் நிலையத்தில் சிறுமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் குமார் தீர்ப்பளித்தார்.

சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் மூலம் ராமச்சந்திரன் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது. ராமச்சந்திரனுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபாய் 8,000 அபராதமும் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார்.

போக்சோ சட்டம் (பிரிவு 5(l), 5(n) r/w 6) கீழ் ஆயுள் தண்டனை (14 ஆண்டுகள்) மற்றும் ரூபாய் 5,000 அபராதமும், பிரிவு 323- ன் கீழ் (தாக்குதல்) 1 ஆண்டு சிறை மற்றும் ரூபாய் 1,000 அபராதம் பிரிவு 506(i)-ன் கீழ் (கொலை மிரட்டல்) 1 ஆண்டு சிறை மற்றும் ரூபாய் 1,000 அபராதம் பிரிவு 417- ன் கீழ் (ஏமாற்றுதல்) 1 ஆண்டு சிறை மற்றும் ரூபாய் 1,000 அபராதம் என ஒட்டுமொத்தமாக ராமசந்திரனுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 8,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பிலிருந்து ரூபாய் 3,00,000 இழப்பீட்டுத் தொகையாக வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.