முதுமலையில் விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள்
முதுமலையில் வளர்ப்பு யானைகள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, விநாயகர் கோவிலை சுற்றி யானைகள் மணி அடித்தும், தும்பிக்கையை தூக்கியும், விநாயக கடவுளை வணங்கியது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவின் மிகப் பழமையான புலிகள் காப்பகமாக உள்ளது இங்குள்ள தெப்பக்காடு யானைகள் முகாம் அபயாரணயம் யானைகள் முகாமில் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. முதுமலை வளர்ப்பு யானைகளை காப்பகத்திலும் அதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக அங்குள்ள மாயாற்றில் அனைத்து யானைகளும் குளிக்க வைக்கப்பட்டு சந்தனம், குங்குமம், மாலைகளால் ஜோடிக்கப்பட்டன. பின்பு தெப்பக்காடு யானையில் முகாமில் இருக்கும் விநாயகர் கோவில் முன்பாக வரிசையாக நிற்கவைக்கப்பட்டன.
இதனை அடுத்து அந்த கோவிலின் பூசாரியான பொம்மன் விநாயகருக்கு பூஜை செய்த நிலையில் அந்த கோவிலை சுற்றி கிருஷ்ணா யானை மணி அடித்தவாறு சுற்றி வந்தது அதன் பின்பு தும்பிக்கை தூக்கியும் விநாயகப் பெருமானை வணங்கின. இந்த காட்சியை அங்கு கூடி இருந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த நிலையில் பின்பு யானைகளுக்காக தயாரிக்கப்பட்டு வைத்திருந்த ஊட்டச்சத்து உணவான கேழ்வரகு, ராகி, அரிசி, வெள்ளம், கரும்பு, தாது உப்பு, தேங்காய், மட்டுமின்றி சிறப்பு உணவான பல்வேறு வகையான பழங்கள் தர்பூசணி ,அன்னாசி பழம் ஆப்பிள் ,வாழைப்பழம் யானைகளுக்கு வழங்கப்பட்டன.
இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்த சூழ்நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு கடலை, பொங்கல் போன்ற உணவுகளும் வழங்கப்பட்டன. முதுமலை வளர்ப்பு யானைமுகம் கொண்ட விநாயகர் பெருமானுக்கு யானைகள் பூஜை செய்து வழிபட்டது அங்கு வந்து இருந்த சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.