விஜய்க்கு ஊழல் குறித்துப் பேசத் தகுதியுள்ளதா? வரி ஏய்ப்பு புகாரை ஆதாரமாகக் காட்டி கி.வீரமணி தாக்கு..!
தஞ்சையில் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் இல்ல திறப்பு விழா நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு புதிய இல்லத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் களத்தில் அனைத்து கட்சிகளும் தங்களின் கூட்டணி தான் வலிமையாக உள்ளது என கூறி வருகிறார்கள். ஆனால் நடைமுறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி தான் தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறது. இதனால் வலிமையான கூட்டணி திமுக தான் என்று கூறலாம்.
அதிமுக கூட்டணி வளமான கூட்டணியாக வேண்டுமென்றால் இருக்கலாம். ஆனால் வலிமையான கூட்டணி கிடையாது. மோடி, அமித்ஷா அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவது திமுகவுக்கு தான் சாதகம். அவர்கள் தமிழ்நாட்டிற்கு வர வர திமுகவுக்கு ஓட்டுகள் அதிகரித்து கொண்டே இருக்கும். தற்போது 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி என்ற இலக்கில் திமுக செயல்பட்டு வருகிறது. அந்த இலக்கை திமுக அடையும் என்பதில் சந்தேகமில்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஊழல் குறித்து பேச விஜய்க்கு எந்த தகுதியும் கிடையாது. வரி ஏய்ப்பு விவகாரத்தில் அவருக்கு வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது சரி தான் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் கார் வாங்கியதில் முறையாக வரி கட்டாததற்கும் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த இரண்டு விஷயங்களை வைத்து பார்த்தால் விஜய் ஊழலை ஓழிப்பார் என்று எப்படி கூற முடியும்? எந்த ஒரு கொள்கையும் இல்லாமல் அவர் சூட்டிங் நடத்தி வருகிறார். முதலில் அவர் முழுமையான அரசிலுக்கு வந்தபிறகு அவர் குறித்து பேசலாம்" என தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், இதுவரை தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகள் ஊழலில் திளைத்துள்ளதாகவும், அதை மாற்ற வேண்டிய தேவை தவெகவுக்கு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
விஜய்யின் குற்றச்சாட்டு தொடர்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி, கரூர் உயிரிழப்புக்கு காரணமாக விஜய், அடுத்தவர்களை குறைகூறும் தார்மீக தகுதியை இழந்துவிட்டதாக காட்டமாக தெரிவித்திருந்தார்.


