அரசு அளித்த உத்தரவாதம்...மருத்துவர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்
மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவர் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி இளைஞர் ஒருவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள், காவல்துறை பாதுகாப்பு, உதவியாளர் நுழைவுச்சீட்டு போன்றவை செய்வதாக அரசு தரப்பில் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதேபோல் மருத்துவர்களின் கோரிக்கைகள் நவம்பர் 29ம் தேதிக்குள் செய்து தரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த வாக்குறுதியை ஏற்று மருத்துவ சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. எந்த நோயாளியும் பாதிக்கப்பட கூடாது என்பதால் நாளை முதல் அனைத்து பணிகளும் தொடரும் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.