மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் பரிசுகள் பெற டாக்டர்களுக்கு தடை; மத்திய அரசு உத்தரவு..!
சந்தையில் ஒரே மூலப்பொருளுக்கு, நுாற்றுக்கணக்கான, 'பிராண்ட்' பெயர்களில், மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. டாக்டர்கள் எழுதும் மருந்துச் சீட்டில், தங்களது நிறுவனத்தின் பிராண்ட் பெயரை குறிப்பிட, மருந்து நிறுவனங்கள் அவர்களுக்கு பரிசு பொருட்களும், பணமும் வழங்குவதாக புகார் கூறப்படுகிறது.
குறிப்பாக, தங்க நகைகள், வெளிநாட்டு சுற்றுலா ஏற்பாடு உள்ளிட்டவற்றை, டாக்டர்களுக்கு மருந்து நிறுவனங்கள் செய்து தருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், மருந்து நிறுவனங்களிடம் இருந்து, அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், பரிசு பொருட்களோ மற்ற பண உதவிகளோ பெறக்கூடாது என, மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், அவ்வாறு வாங்கும் டாக்டர்கள் மீது, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கவும், அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இது குறித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் கூறியதாவது: சந்தைக்கு புதிதாக வரும் உயரக மருந்துகளை பரிந்துரை செய்ய, சில டாக்டர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.விலை உயர்ந்த பொருட்களையும் பரிந்துரைப்பதால், பொது மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த செயலில் ஈடுபடும் டாக்டர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.அதன்படி, தமிழகத்தில் டாக்டர்கள் யாராவது, மருத்து நிறுவனங்களிடம் இதுபோன்ற, 'கவனிப்புகள்' பெறுவது தெரியவந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

