இனி டீ, காபி குடிக்கவும் யோசிக்கணுமா? சர்க்கரை விலையால் வரப்போகும் அடுத்த ஷாக்!
மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், சர்க்கரை உற்பத்திக்கான கரும்பு சாகுபடி, ஐந்து கோடி ஏக்கரில் நடப்பது வழக்கம். ஆனால், பல மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை, விலை கட்டுப்படியாகாதது, வேலையாள் கூலி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு தேவையான கரும்புக்கு, அண்டை மாநிலங்களை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கரும்பு உற்பத்தி குறைவு காரணமாக, பல சர்க்கரை ஆலைகள் உற்பத்தியின்றி மூடி கிடக்கின்றன. சர்க்கரை உற்பத்தி குறைந்ததால், விலை உயரத் தொடங்கி உள்ளது. தற்போது, நாடு முழுதும் பண்டிகை காலம் துவங்கி உள்ளது. ஓணம், விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, துர்காபூஜை, தீபாவளி என, அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளன.
சர்க்கரையின் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. உற்பத்தி குறைவை கருத்தில் வைத்து, விலையை ஏற்றுவதற்காக, நாடு முழுதும் உள்ள 'ஆன்லைன்' மொத்த வர்த்தகர்கள், சர்க்கரையை பதுக்கி வைப்பதை அதிகரித்துள்ளனர். இதனால், செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு மாதத்திற்கு முன், கிலோ, 47 ரூபாய்க்கு விற்கப்பட்ட, ஒரு கிலோ சர்க்கரை, தற்போது, 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பண்டிகை நேரத்தில் இந்த விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி இல்லாததால், வெளிமாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. வாகன வாடகை, ஏற்றி இறக்கும் கூலி உள்ளிட்டவை அதிகரித்துள்ளதால், அதைக் காரணம் காட்டி, சர்க்கரை விலையை மொத்த வியாபாரிகள் உயர்த்தி உள்ளனர்.அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை வரை, சர்க்கரை விலை குறைவதற்கு வாய்ப்பில்லை. சர்க்கரை விலை உயர்வால், கடைகளில் டீ, காபி விலையும் உயர்ந்துள்ளது. இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்களின் விலையும், அடுத்தடுத்து உயரும் வாய்ப்புள்ளது.

