ஜோதிடம் பார்க்கும்போது ராசியை பார்க்கணுமா? இல்ல லக்னத்தை பார்க்கணுமா?
நம்மில் பலருக்கு ஒரு பெரிய குழப்பம் உண்டு. "ஜோதிடம் பார்க்கும்போது ராசியைப் பார்க்கணுமா? இல்ல லக்னத்தைப் பார்க்கணுமா?
கொஞ்சம் ஜோதிடம் தெரிந்தவர்களுக்கு தங்களது ராசி என்னவென்று கேட்டால் சொல்வார்கள். ஆனால் லக்னம் பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்காது! அதென்ன லக்னம், அது என்ன ராசி? அதன் ஆக்கமும் தாக்கமும் என்ன, எப்படிப்பட்டது!
ராசி என்பது சந்திரன் என்ற மதியை மையப்படுத்தியது. அதாவது புத்திசாலித்தனத்தை குறிப்பது. சந்திரன் எந்த ராசி கட்டத்தில் இருக்கிறதோ, அந்த கட்டத்தை ராசி என்கிறோம். சந்திரன் ரிஷபத்தில் உச்ச ஒளி திறனுடனும், நேர் எதிரான ஏழாமிடத்தில் விருச்சிகத்தில் ஒளி குறைவான நிலையில் இருக்கும். ஆனால் அந்த ஒளியைய் தீர்மானிப்பது சூரியன் இருக்கும் இடத்தை பொறுத்து, பௌர்ணமி அல்லது அம்மாவாசை என்பதால், அதையும் முக்கியப்படுத்த வேண்டும். அந்த சந்திரன் கடகத்தில் இருக்கும்போது ஆட்சியில் இருக்கும்போது, மிக அருகில் இருப்பதால் அதன் ஈர்ப்பு விசை அதிகம் இருக்கும்
எனவே ராசியை பார்க்கும்போது மூன்று விஷயங்கள் முக்கியம், அதன் ஒளித்தன்மை (பௌர்ணமி/அமாவாசை, இரவு/பகல், அதன் அருகாமை ஈர்ப்பு (கடகம்/மகரம்). இதில் சூரியனுக்கு 1 முதல் 6 வரை (1-180" பாகை) வளர்பிறையை சுபத்துவமாகவும், தேய்பிறையை (181"-360") வரை பாபத்துவமாகவும் பார்ப்பது ஏன் என்ற கேள்விக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள்.
பகலில் பிறந்த ஒரு குழைந்தைக்கு சந்திரன் எங்கிருந்தாலென்ன? இரவில் பிறந்த குழந்தைக்கு சூரிய எங்கிருந்தாலென்ன? இப்படி கேள்விகள் எழுந்தால் உங்களுக்கு கோள்கள் பற்றிய அடிப்படை அதிகம் என்று சொல்லலாம். அதை கிண்டல் செய்துவிட்டு கடந்துவிட்டால் அது நாத்திகம், அதற்கு விடை தேடினால் ஆத்திகம்!
அடுத்து லக்னம் பற்றி பார்க்கலாம். லக்னம் சூரியனை மையப்படுத்தியது, அதை விதி என்கிறோம். சித்திரையில் சூரியன் மேஷத்தில் இருக்கும். அப்போது சூரிய உதய காலத்தில் முதல் 2 மணி நேரம் (6 am -8am), மேஷத்தில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் (8 am - 10 am) ரிஷபத்தில் இருக்கும், அப்படி 24 மணி நேரம் 12 ராசிக்கட்டங்களுக்கு லக்னம் மாறிக்கொண்டே இருக்கும். எளிதாக சொன்னால், சூரியன் இருக்கும் ராசியில் இருந்து, நம் பகல் இரவை பொறுத்து, நாம் பிறந்த இடத்தில், நேரத்தின் போது, சூரியன் எந்த ராசியில் இருக்கிறது என்பதை சொல்கிறது லக்னம்.
லக்னம் என்பது ஜாதகரின் விதியை பிரதானமாக சொல்வது. மேலே சொன்னதுபோல ஒரு ஜாதகரின் லக்னம் கும்பம் என்றால், அந்த ராசிக்கட்டத்தின் லக்னாதிபதி யார் என்பதுதான் அங்கே மிக முக்கியம். ஒவ்வொரு ராசிக்கட்டத்திற்கும் ஒரு அதிபதி உண்டு. மகரம், கும்பம் இரண்டுக்குமே சனி லக்னாதிபதி ஆவார்.
சிம்மத்திற்கு சூரியன் அதிபதி, கடகத்திற்கு சந்திரன் அதிபதி. சூரியன், சந்திரன்
இருவருக்கும் மட்டும் ஒரே ஒரு வீடு. சூரியனுக்கு அருகில் உள்ள அடுத்த கிரகம் புதன். அதனால சூரியன், சந்திரனுக்கு அருகில் இருக்கும் அடுத்த வீடான மிதுனம், கன்னி என்பதற்கு புதன் அதிபதி. அடுத்து சுக்கிரனுக்கு ரிஷபம், துலாம். அடுத்த செவ்வாய்க்கு மேஷம் விருச்சிகம். குருவுக்கு மீனம், தனுசு, சனிக்கு மகரம், கும்பம்.
1. லக்னம் (உடல் மற்றும் உயிர்): 🏃♂️
நீங்கள் பிறந்த நேரத்தில் கிழக்கு வானில் உதித்த ராசிதான் உங்கள் லக்னம். இதுதான் உங்கள் ஆளுமை, தோற்றம், குணம் மற்றும் உங்கள் வாழ்க்கையின் பாதை எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிக்கும் 'அஸ்திவாரம்'. உங்கள் ஜாதகத்தின் உயிர்நாடியே லக்னம் தான்.
2. ராசி (மனம்):
சந்திரன் நின்ற ராசிதான் உங்கள் ராசி. சந்திரன் மனோகாரகன். உங்கள் மனநிலை, எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை இது பிரதிபலிக்கும். கோட்சார பலன்கள் (இன்றைய ராசி பலன்) பார்ப்பதற்கு ராசி முக்கியம்.
3. நட்சத்திரம்
(வாழ்க்கை முறை):
உங்கள் வாழ்நாள் முழுமைக்கும் நடக்கும் பலன்களை அறிய லக்னம் முக்கியம்.
தற்காலிகமான அன்றாட மாற்றங்களை அறிய ராசி முக்கியம்.
சுப காரியங்கள், திருமணப் பொருத்தம் பார்க்க நட்சத்திரம் முக்கியம்.
முடிவு: லக்னம் என்பது 'வேர்', ராசி என்பது 'கிளை', நட்சத்திரம் என்பது 'கனி'. இம்மூன்றும் சரியாக அமைந்தால் வாழ்க்கை இனிக்கும்!
நீங்கள் பிறந்த நட்சத்திரம் தான் உங்கள் தசா புத்தி வரிசையைத் தீர்மானிக்கிறது. உங்கள் வாழ்வில் எந்தக் காலத்தில் என்ன நடக்கும் என்பதை இதுவே முடிவு செய்கிறது.
மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும். ‘சரம்’ என்றால் ‘இயங்கிக் கொண்டே இருப்பது’ என்று பொருள். ‘சரம்’ என்பது பூமி சூரியனை சுற்றி நகர்வதுபோல நகரும் தன்மையை குறிப்பதால் இடப்பெயர்ச்சியை தந்து கொண்டே இருக்கும். எண்ணம் சீராக இருந்தாலும் செயல்படுத்த முடியாத தன்மை மிகுதியாக இருக்கும்.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். ‘ஸ்திரம்’ என்றால் ‘ஒரே நிலையில் இருப்பது’ எனப் பொருள். கடிகாரம் ஒரே இடத்தில் இருந்தாலும் அதன் முட்கள் நகர்ந்து கொண்டு இருப்பதைப்போல, இவர்களின் செயல்பாடுகள் மிகுந்த நிதானத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருக்கும்.
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். ‘உபயம்’ என்றால் ‘ஒரே நிலையில் இல்லாது அசைந்தும் அசையாமலும் இருப்பது’ எனப் பொருள். ‘உபயம்’ என்பது இரு தன்மைகளையும் குறிக்கும். சந்திரன் பூமியை சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றுவது போல உறுதியான எண்ணத்துடன் இருக்க முடியாதவர்கள். எண்ணத்தை அடிக்கடி மாற்றக் கூடியவர்கள் இவர்கள்.
நெருப்பு ராசிகள்: மேஷம், சிம்மம், தனுசு. இந்த ராசியில் பிறந்தவர்கள் கோபமாகவும், முரட்டுத்தனமாகவும், தைரியமாகவும் தலைமைப் பொறுப்புடன் , தைரியசாலிகளாகவும், தன்னிச்சையாக முடிவு எடுப்பவர்களாகவும் தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
நில ராசிகள்: ரிஷப, கன்னி, மகர ராசி. இந்த ராசியை சேர்ந்தவர்கள் பெரும்பாலான நேரங்களில் பொறுமையின் சிகரமாக, சாந்தமாக விட்டுக்கொடுக்கும் குணத்துடனும், அன்பு நிறைந்து மனத்துடனும், ஒழுக்கத்துடனும், பாசத்துடனும் நல்வழியில் செல்பவர்களாக இருப்பர். இந்த ராசிக்காரர்களுக்கு நரம்பு மண்டலத்துடன் நெருங்கிய சம்மந்தம் உண்டு. சிறிய விஷயத்துக்கெல்லாம் கவலைப்படுவார்கள்.
காற்று ராசிகள் மிதுனம் ராசி, துலாம் ராசி, கும்ப ராசி. இந்த ராசியை சேர்ந்தவர்களின் மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே, தற்பெருமையுடன் உயர்ந்த ஆராய்ச்சியுடன் அறிவாளிகள் புடைசூழ சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும், எந்த நேரமும் ஆலோசனை செய்து கொண்டும், நல்ல குணங்கள் நிறைந்தவர்கள், கெட்டிக்காரர்கள், கற்பனை மிகுந்தவர்கள், எதையும் நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள்.
நீர் ராசிகள்: கடகம் (நண்டு), விருச்சிகம், மீனம். இந்த ராசியில் பிறந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக, அமைதியாகவும், ஞானத்துடன் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பர். இந்த ராசிக்காரர்கள் கற்பனை வளம் கொண்டவர்கள்.
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை ஆண் ராசிகள். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை பெண்ராசிகள் எனப்படும். ஆண் ராசிகளை இலக்கினமாகக் கொண்டவர்கள் ஆணின் குணாதியங்கள் அதிகம் உள்ளவர்கள்.
மேலும் மேஷம் முதல் கன்னிவரை வடக்கு ராசி எனவும், துலாத்திலிருந்து மீனம் வரை தெற்கு ராசிகள் எனவும் அழைக்கப்படும்.
அதற்கு மேலாக ஒவ்வொரு ராசியும் நட்சத்திரங்களாகவும், பாதங்களாகவும் பிரிக்கப்பட்டு இருக்கும். அதாவது 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களாகவும், ஒவ்வொரு நட்சத்திரங்களும் நான்கு பாதங்களாகவும் பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த நடசத்திரங்களின் அதிபதிகள் வேறு வேறானவை. அந்த அதிபதிகளின் தாக்கமும் அந்த லக்னத்திற்கு இருக்கும்.
இப்போது மேஷ ராசியில் செவ்வாயை ராசி அதிபதியாக கொண்டவர்கள் இயல்பு சர, நெருப்பு, ஆண், வடக்கு தன்மையையும், அதன் நட்சத்திரங்களுக்கு ஏற்ப இயல்புகளும் கொண்டிருக்க, விருச்சிகத்தில் உள்ள செவ்வாயின் குணங்கள் ஸ்திர, நீர், பெண், தெற்கு தன்மையுடையவையாக இருக்கும் எனும்போது ஒரே லக்னாதிபதி செவ்வாயாக இருந்தாலும், அவர்கள் குணாதிசியங்களில் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
அதனால் ஒவ்வொரு வீடும் தனித்தன்மை கொண்டவை. அவை ராசிக்கு மதியின் அடிப்படையிலும், லக்னத்திற்கு இந்த பிறவியில் நாம் பெற்ற சரீரம் (உடம்பு) விதியின் அடிப்படையிலும் தாக்கங்களை கொடுக்கக்கூடியது.

