நீண்டகால கடன் தொல்லை உடனே தீர வேண்டுமா? இன்று கந்த சஷ்டி 4-ஆம் நாள்... இன்று இந்த 4 ஜீவராசிகளுக்கு உணவளியுங்கள்..!

 
1

முருகனுக்கென எத்தனையோ விழாக்கள் இருந்தாலும் அதில் சிறந்தது சஷ்டி. இந்த சஷ்டி நாட்களில் முருகனுக்காக விரதமிருந்து மனமுருகி வழிபட்டால் நமக்கு வேண்டியதை கொடுத்து அருள்வான் முருகன். ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம:  குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானது.

கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளில் இருந்தும், கஷ்டத்தில் இருந்தும், நோய் நொடிகளில் இருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்.

கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். இவர் எதற்காக இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா? தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும்அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை.

வாழ்க்கையே வெறுத்துப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார். அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார்.

நல்ல அருட்கவி யும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார். அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும். தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன.

அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்த, `சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்' என்று தொடங்கும் கவசம்.

இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது. என்றாலும் ஆறு கவசத்தையும் ஒருங்கே பாடுவதே சிறப்புத்தரும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே. கந்தன் என்று சொன்னாலே, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் நீங்குமே. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் கிடைக்கும் பயனை சொல்லவும் வேண்டுமா?

இத்தனை சிறப்பு வாய்ந்தது இந்த கந்த சஷ்டி கவசம். இதனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து, அறிவு, செல்வம், சந்தானம், வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்தி வாய்ந்த கவசமாகும்.

பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவச நூலை முருகன்மீது பாடவேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் பாடியதுதான் 'சண்முக கவசம்'. இந்த சண்முக கவசமும் ஆறு கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.

கந்த சஷ்டியின் நான்காம் நாள் விரதத்தை மைய நாள் என்றே சொல்ல வேண்டும். கந்தசஷ்டி விரதம் 7 நாட்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம் என்பதனால் இதனை மைய நாள் என்கிறோம். அதிலும் கந்தசஷ்டி சமயத்தில் வெள்ளிக்கிழமையில் வரும் நாள் மிக விசேஷமானது.

பொதுவாக வெள்ளிக்கிழமை அம்பிகை வழிபாட்டிற்குரிய நாளாக நாம் சொல்கிறோம். கந்தசஷ்டியின் ஐந்தாம் நாளில் அம்பிகையிடம் முருகப் பெருமான் வேல் வாங்கும் வைபவம் அனைத்து முருகன் கோவில்களிலும் விமர்சையாக நடக்கும். வேல் வாங்குதல் நிகழ்வு முக்கியத்துவம் பெறும் தலம் என்றால் அது சிக்கல் சிங்கார வேலன் கோவிலில் தான். சூரபத்மனை சம்ஹாரம் செய்வதற்காக சக்தி வேலை வாங்கியதும், கோபத்தில் முருகனுக்கு வியர்த்துக் கொட்டும் அதிசயம் இப்போதும் நடப்பது ஆச்சர்யமான ஒன்று.

அம்பிகையிடம் வெற்றி வேலை முருகன் வாங்குவதற்கு முந்தைய நாளான இன்று அம்பிகையிடம், உன் பிரியமான பிள்ளை எப்படி அசுரர்களை அழித்து தேவர்களை காத்தாரோ அதே போல் என் வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள், கஷ்டங்களை அழித்து, வளமான, மகிழ்ச்சியான வாழ்க் கையை எனக்கு தந்தருள முருகனிடம் நீ சொல் தாயே என மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.

கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு கூடுதல் சக்தி தேவைப்படக் கூடிய நாளும் இந்த நான்காம் நாள் தான். மனதில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனது உற்சாகமாக இருந்தால் உடலில் சோர்வு வராது. அதனால் சந்தோஷமாக முருகப் பெருமானை நினைத்து, அவருக்குரிய பாடல்களை பாடி, பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்.

வழிபடும் முறை

வழக்கம் போல் இன்றும் கலசத்திற்கு புதிய பூ போட்டு, காலையிலும் மாலையிலும் மந்திர ஜபம் செய்ய வேண்டும். புதிதாக சட்கோண கோலம் அமைக்க வேண்டும். இன்றைய தினம் சட்கோணத்தின் மீது நான்கு நெய் விளக்குகள் ஏற்ற வேண்டும். இன்று முருகனுக்குரிய நைவேத்தியங்களாக புதினா சாதம், கொத்தமல்லி சாதம், தேங்காய் சாதம் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடலாம்.

சாதத்தை உதிரி உதிரியாக வடித்து, அதில் புதினா, கொத்தமல்லி ஏதாவது ஒன்றை எண்ணெய்யில் வதக்கி, அதோடு கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய், உப்பு, புளி சேர்த்து வதக்க, அதை அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதை வதக்கி விட்டு, வடித்து வைத்துள்ள சாதத்தில் சேர்த்து கிளறலாம். விரத காலத்தில் இதெல்லாம் செய்ய வேண்டுமா என பலரும் யோசிக்கலாம்.

எல்லாம் செய்ய வேண்டும். விரதமும் இருக்க வேண்டும். அது தான் விரதத்தின் கட்டுப்பாடு. எதுவுமே இல்லை என்னும் போது விரதம் மேற்கொள்வதை விட, இப்படி சமையல் உள்ளிட்ட அனைத்தையும் செய்து கொண்டே விரதம் இருப்பது தான் உயர்வானது. அப்போது தான் நம்முடைய மனம் நமக்கு எந்த அளவிற்கு கட்டுப்பட்டு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

செய்ய வேண்டிய தானம் என்ன?

இன்று ஏதாவது நான்கு ஜீவராசிகளை தேர்வு செய்து அவற்றிற்கு உணவளிக்க வேண்டும். பசு, நாய், பூனை, புறா, காகம், எறும்பு, ஆடு, கோழி, எறும்பு என இவற்றில் ஏதாவது நான்கை தேர்வு செய்து உணவு வழங்கலாம். நான்கு கிடைக்கவில்லை ஒன்று மட்டும் தான் உள்ளது என்றால், அதற்கு உணவளித்தாலே போதுமானது.

பல காலமாக கடன் அடையாமல் உள்ளது, கடன் பெருகிக் கொண்டே போகிறது, கடனால் பல கஷ்டங்களை அனுபவிக்கிறோம் என்பவர்கள் இந்த நாளில் ஏதாவது ஒரு ஜீவராசிக்கு உணவளிப்பது கடன் தொல்லையை குறைக்கும். பொதுவாகவே வெள்ளிக்கிழமையில் பசு மாட்டிற்கு உணவளித்தால் கடன் அடையும். ஜீவராசிகளுக்கும் தரும் உணவிற்கும், கடனுக்கும் நிறைய தொடர்பு உண்டு. நாம் செய்ய முடியாவிட்டாலும், நமக்காக யார் செய்தாலும் அது பலனை கொடுக்கும்.

தானம் கொடுக்க வேண்டிய பொருள் :

இன்றைய தினம் கண்டிப்பாக செய்ய வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், விபூதி அல்லது நெய்யை யாராவது ஒரு மனிதருக்கு தானமாக கொடுக்க வேண்டும். தானங்களிலேயே மிக உயர்ந்த தானங்களில் ஒன்று விபூதி தானம். முன்பெல்லாம் விபூதி வை தைத்து, அதில் விபூதி நிரப்பு, பாதயாத்திரை செல்பவர்களுக்கு, சிவனடியார்களுக்கு தானமாக கொடுப்பார்கள்.

விபூதியை மனிதர்களுக்கு கொடுக்க வாய்ப்பு இல்லாதவர்கள், அருகில் உள்ள கோவிலுக்கு விபூதி வாங்கி தரலாம். ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு எவ்வளவு அளவில் முடியோ அந்த அளவிற்கு நெய் வாகங்கி தானமாக கொடுக்கலாம். இப்படி செய்வதால் கடன் சுமை நிச்சயம் குறையும்.

கடன் விரைவில் அடைபட :

இன்று வெள்ளிக்கிழமை என்பதால், அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு பால் அபிஷேகம் செய்ய பால் வாங்கி தரலாம். நீண்ட கால கடனில் தவிப்பவர்கள் இந்த தானங்களில் எது முடியுமோ அதை செய்து, முருகனை வழிபட்டால் அடுத்த ஆண்டு சஷ்டிக்குள்ளாக நிச்சயம் கடன் சுமை குறைந்து, மகிழ்ச்சியாக வாழ்க்கையை முருகன் அமைத்து கொடுப்பார்.

தினமும் காலை மாலை கந்த சஷ்டி கவசத்தினை படித்தோ, கேட்டோ முருகப்பெருமானின் அருளை பெறுங்கள்.