ரயில்களில் பொதுப் பெட்டிகள் ஏன் முன்புறமும் பின்புறமும் உள்ளது தெரியுமா ?

 
1

சிறியவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் மற்றும் விருப்பமான பயணம் என்றால் ரயில் பயணம். முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்யும் நபர்கள் தாங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டிய 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்கின்றனர்.

இதனால் தங்களது இருக்கை ரயில்களில் உறுதி செய்யப்படுகிறது. இதனை அடுத்து, தாங்கள் விரும்பிய ஸ்லீப்பர், ஏசி ஆகிய வகுப்புகளில் பயணிகள் பயணம் செய்கின்றனர்.

இதனை தவிர்த்து அவசரமான சூழ்நிலையிலும், தவிர்க்க முடியாத நிலையிலும் திடீரென பயணம் மேற்கொள்ள விரும்புவோர் ஜெனரல் டிக்கெட்டுகளை எடுத்து பொதுப் பெட்டிகளில் பயணம் செய்கின்றனர். இவ்வாறு பொதுப் பெட்டிகளில் பயணம் செய்வோர் பல்வேறு சிரமங்களையும் சந்திக்கின்றனர்.

ஆனால், ரயில் பிளாட்பாரத்தில் நிற்கும் போது கூட இதற்கான பயண டிக்கெட்டை நாம் எடுக்க முடியும். இருப்பினும், பொது பெட்டிகளில் நிரம்பி வழியும் கூட்டத்தினால் சிலர் அச்சமும் கொள்கின்றனர். அதேநேரம் தாங்கள் எழுந்து சென்று விட்டால் அந்த இருக்கை நமக்கு இல்லை என்பதும் நிதர்சனமான உண்மை.

மேலும், இதில் பயணிக்கும் பலர் இயற்கை உபாதையை அடக்கியே பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் அந்த பொதுப் பெட்டிகளில் இருக்கும் கழிவறை அதற்கான பயன்பாட்டிற்கு இல்லாமல் போகும் சூழ்நிலையும் உள்ளது. இதனிடையேயும் வழியில் உள்ள பல்வேறு இயற்கையை ரசித்து வரும் பயணிகளுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம்.

ஏன் ரயில்களில் பொதுப் பெட்டிகள் ரயிலின் முன்னும் பின்னும் மட்டுமே உள்ளது என்ற சந்தேகம்தான் அது. அதற்கு பல்வேறு வகைகளிலும் பதில்கள் கிடைக்கின்றன.

குறிப்பாக, ஸ்லீப்பர் மற்றும் ஏசி வகுப்புகளில் முன்பதிவு செய்து வருவோரை தொல்லை அளிக்கக்கூடாது என்பதற்காக பொதுப் பெட்டிகள் ரயிலின் முன்புறமும் பின்புறமும் அமைக்கப்பட்டிருக்கிறது என சிலர் கூறுகின்றனர். ஆனால் அதை முற்றிலும் தவறு என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், ஒரு ஸ்லீப்பர் கோச்சில் 72 பேர் பயணம் மேற்கொள்ள முடியும். அதேபோல் ஏசி வகுப்புகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும்.

ஏனென்றால், அதற்கு அந்த சீட்டுகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கைகள் அமர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுப் பெட்டிகளில் அவ்வாறு கிடையாது. எவ்வளவு பேர் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம். இந்த இடத்தில் தான் ரயிலின் நடுநிலைத் தன்மையை நாம் கவனிக்க வேண்டும்.

பொதுப் பெட்டிகளை நீண்ட தூரம் செல்லக்கூடிய ரயிலின் இடைப்பகுதியில் வைத்தால் ரயிலின் நடுநிலைத் தன்மை பாதிக்கப்படும். எனவே, ரயிலின் முன்னும் பின்னும் பொதுப் பெட்டிகளை வைப்பதன் மூலம் அதன் நடுநிலைத் தன்மை தொடர்ந்து சீராக வைக்கப்படுகிறது.

இதனால் ரயில் திரும்பும்போதும், வளைவுகளில் நன்றாக வளையும் போதும் அதன் சமநிலை பேணப்படுகிறது" என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். எது எப்படியோ பொதுப் பெட்டிகளில் பயணம் செய்வதும் ஒரு சுகமே என்பதும் பயணிகளின் ஒரு கருத்தாக இருக்கிறது.