இந்த தேர்தலில் நோட்டாவிற்கு கிடைத்த வாக்கு சதவீதம் எவ்வளவு தெரியுமா..?

 
1

நோட்டா என்றால் None of the above என்று அர்த்தம். அதாவது போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் இந்த நோட்டாவில் வாக்கைப் பதிவு செய்யலாம்.

கடந்த 2013ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து இந்த நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் சத்தீஸ்கர், ராஜஸ்தான். மத்தியப் பிரதேசம், டெல்லி சட்டசபைத் தேர்தல்களில் இது அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பிறகு அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தத் தொடங்கப்பட்டது.

இந்த நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே இதில் பதிவாகும் வாக்குகள் என்பது கணிசமாகவே இருந்துள்ளது. யாருக்கும் வாக்களிக்காத வேட்பாளர்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பதால் பல சமயம் இது வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்குக் கூட இருந்துவிடுகிறது. இதனால் சமூக வலைத்தளங்களில் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தனியாகப் பிரச்சாரம் நடந்து வருவதும் தனிக்கதை.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 'நோட்டா' எனப்படும் யாருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லை என்ற வாய்ப்புக்கு, மக்களிடம் பெரும் வரவேற்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் மட்டும் 1.29 சதவீத வாக்காளர்கள் மட்டுமே நோட்டாவை பயன்படுத்தி உள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில் 0.81,

புதுச்சேரியில் 0.73 

கேரளத்தில் 0.58 சதவீத வாக்காளர்கள் மட்டுமே நோட்டா பட்டனை அழுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் 0.41 சதவீதம் பேர் (1,99,801) நோட்டாவை பயன்படுத்தி உள்ளனர்.

தேர்தல் ஆணைய புள்ளிவிபரப்படி, கடந்த மூன்று லோக்சபா தேர்தல்களிலும் நோட்டாவுக்கு ஓட்டு போடுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு 1.08 சதவீதமாக இருந்த நோட்டா, 2024ல் 0.99 சதவீதமாக குறைந்துள்ளது.கடந்த 2013ம் ஆண்டுக்கு முன், எந்த வேட்பாளருக்கும் ஓட்டு போட விரும்பாதவர்கள், அதற்கான 'படிவம் 49-O'ஐ நிரப்பி, தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்கும் வசதி இருந்தது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைப்படி ஓட்டுச் சாவடியிலேயே இந்தப் படிவத்தை நிரப்ப வேண்டியிருந்ததால், வாக்காளரின் ஓட்டுரிமை ரகசியம் வெளியாவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்தே, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் வரிசையில் கடைசியாக நோட்டாவுக்கும் ஒரு பொத்தான் அமைக்கப்பட்டது.