உங்ககிட்ட பான் கார்டு இருக்கா..? அப்போ புத்தாண்டுக்குள் இதை முடிச்சிடுங்க..!
பான் கார்டு விஷயத்தில் மிக முக்கியமான விதிமுறை வருகிறது.வரி தாக்கல் செய்வது முதல், ரீஃபண்ட் பணம் பெறுவது வரை அனைத்து நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு அவசியம். பான் எண் செயலற்றதாகிவிட்டால் வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்ய முடியாது. மேலும், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான செயல்முறைகளும் தடைபடும். சம்பளம் பெறுவதிலும், SIP முதலீடுகளைத் தொடர்வதிலும் சிக்கல்கள் ஏற்படும். வங்கிகள் உங்கள் பணப் பரிவர்த்தனைகளையும் முதலீடுகளையும் முடக்கவும் வாய்ப்புள்ளது.மேலும் பல நிதி சார்ந்த சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். எனவே டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்காதவர்களின் பான் எண் ஜனவரி 1 முதல் செயல்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.
இந்த விதிமுறை அனைவருக்கும் பொருந்தாது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs), 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் சில குறிப்பிட்ட மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விலக்குகள் குறித்து வருமான வரித் துறையிடம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை உங்கள் பான் எண் 2026 ஜனவரி 1 முதல் செயலற்றதாகிவிட்டால் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தி அதை மீண்டும் செயல்படுத்தலாம். ஆனால் இந்த செயல்முறைக்கு சுமார் 30 நாட்கள் ஆகலாம். பான் எண் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இலவசமாக பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 அன்று முடிந்துவிட்டது.
மத்திய நிதி அமைச்சகம் மற்றும் வருமான வரித்துறையினர் பல ஆண்டுகளாக மக்களை பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்த இணைப்பைச் செய்வதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிதி சார்ந்த பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். பான் எண் என்பது ஒரு தனிநபரின் நிதி அடையாளமாகும். ஆதார் எண் என்பது ஒரு தனிநபரின் அடையாளச் சான்றாகும். இந்த இரண்டையும் இணைப்பது அரசின் நிதி சார்ந்த சேவைகளை எளிதாக்குவதோடு, வரி ஏய்ப்பையும் தடுக்க உதவும்.
உதாரணமாக, வங்கியில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்யும்போது பான் எண் கேட்கப்படும். உங்கள் பான் எண் செயலற்றதாக இருந்தால் இதுபோன்ற முக்கிய நிதி சார்ந்த நடவடிக்கைகளை உங்களால் செய்ய முடியாது. எனவே, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

