பழிவாங்க இப்படி கூட பண்ணுவாங்களா ? 300 கேஷ்-ஆன்-டெலிவரி பார்சல்களை அனுப்பிய இளைஞர்!

கொல்கத்தாவின் லேக் டவுன் பகுதியில் வசிக்கும் தனது முன்னாள் காதலியான வங்கி நிர்வாகியை துன்புறுத்தியதாகக் கூறி, பிதான்நகர் போலீசாரால் சுமன் சிக்தர் என்ற 25 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமன் சிக்தரும், வங்கியில் வேலை பார்க்கும் அந்த பெண்ணும் காதலித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு பிறகு பிரிவை சந்திக்க நேர்ந்தது. இந்த ஜோடி பிரிந்த சிறிது நேரத்திலேயே, நவம்பர் 2024 இல் தொடங்கிய தொடர்ச்சியான டெலிவரிகளால் அந்த பெண் கடுமையான துயரத்தைச் சந்தித்தாள். காதலி பிரிந்த கோபத்தில் இருந்த சுமன் சிக்தர் அவரது வீட்டுக்கு விலையுயர்ந்த கேஜெட்டுகள் மற்றும் ஆடைகளைக் கொண்ட கேஷ்-ஆன்-டெலிவரி பார்சல்களை தொடர்ந்து அனுப்பினார்.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற முக்கிய மின்வணிக தளங்களில் தொடர்ந்து ஆர்டர் செய்து அனுப்பிக் கொண்டிருந்தார். டெலிவரி ஊழியர்கள் பார்சலை கொடுத்து விட்டு அந்த பெண்ணிடம் பணம் கேட்டு நச்சரித்தனர். தொடர்ந்து கேஷ்-ஆன்-டெலிவரி பார்சல்கள் வந்து கொண்டிருந்ததால் ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த அந்த பெண் மார்ச் 2025 இல் போலீசில் புகார் கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து FIR பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையில், நதியாவைச் சேர்ந்த சுமன் சிக்தர் இந்த வேலையை செய்தது தெரியவந்ததால் அவரை கைது செய்தனர். சுமன் சிக்தரிடம் நடத்திய விசாரணையின்போது, பரிசுகள் மீது பிரியம் கொண்ட அந்த பெண் தொடர்ந்து அவரிடம் பரிசுகளை கேட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சுமன் சிக்தரால் அவர் கேட்கும் பரிசுகளை கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக அவர்களது காதலும் பிரிவை சந்தித்துள்ளது. இந்த ஆத்திரத்தில் தான் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து கேஷ் ஆன் டெலிவரி பார்சல்களை சுமன் சிக்தர் அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.