பழைய கேன்களில் தண்ணீர் குடிக்கிறீர்களா? - உங்களுக்குத் தெரியாமல் உடலில் பரவும் 'ஒவ்வாமை' நோய்!
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது.இதனால், பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை வாங்கிக் குடிப்பது அதிகரித்து வருகிறது. ஆனால், கடைகளில் வாங்கிக் குடிக்கும் கேன் தண்ணீர் மூலம் ஒவ்வாமை பரவுவதாகவும், உடலில் நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் குவிந்து வருகின்றன. இதனால் கோடைக்காலத்தில் மக்களுக்கு தரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஏனென்றால், தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். நாள்தோறும் லட்சக்கணக்கான கேன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
எனவே, கேன் குடிநீரின் தரத்தை உணவு பாதுகாப்புத்துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத குடிநீர் ஆலைகள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், தரம் இல்லாத கேன் குடிநீர் விற்பனை செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தமிழக உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், ‘கேன் வாட்டரில் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதியான தேதி, உணவு பாதுகாப்புத் துறை உரிமம் (FSSAI) உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெறுவது அவசியம். குறிப்பாக, கேன்களில் நிறுவனம் மற்றும் உற்பத்தியாளர் பெயர், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி கட்டாயம் இருக்க வேண்டும்.
கேன் தண்ணீரை நேரடியாக சூரிய ஒளியில் தேக்கி வைக்கக் கூடாது. கேன்களை 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக் கூடாது. கேன்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும். பலமுறை பயன்படுத்திய பழைய கேன்களில தண்ணீரை விற்பனை செய்து, விதிகளை பின்பற்றாத கடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் குடிநீரில் கால்சியம் 10 - 75 மில்லி கிராம் என்ற அளவிலும்; மெக்னீசியம் ஒரு லிட்டர் குடிநீரில் 5 முதல் 30 மில்லி கிராம் என்ற அளவிலும் இருப்பதையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும். ஒருவேளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது பலமுறை புகார்கள் வரும் பட்சத்தில், அந்நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யலாம்’ எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

