"என் கூட சேர்ந்து நீங்களும் இதை செய்யுங்க!" – ரசிகர்களுக்கு நடிகை த்ரிஷா விடுத்த நெகிழ்ச்சியான வேண்டுகோள்..!!
தீபாவளியை முன்னிட்டு ஆதரவின்றி மீட்கப்பட்ட ஒரு நாயின் ஒரு மாத உணவுச் செலவை ஏற்கவிருப்பதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். வெறும் ரூ.1,000 இருந்தால் மீட்கப்பட்ட ஒரு நாய்க்கு ஒரு மாதம் முழுவதும் உணவளிக்க முடியும் எனக் கூறியுள்ள அவர், ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா அமைப்புக்கு நன்கொடை வழங்கி இந்தத் தீபாவளியை ஆதரவற்ற வாயில்லா விலங்குகளுக்கும் மகிழ்ச்சியான நாளாக மாற்ற உதவுமாறு பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "இந்த தீபாவளி நான் ஒரு சிறப்பான விஷயம் செய்யப்போகிறேன். மீட்கப்பட்ட ஒரு நாய்க்கு உணவு வழங்குவதற்கான செலவை ஏற்கிறேன்", வெறும் ரூ.1,000 கொடுத்தால் ஒரு மீட்கப்பட்ட நாய்க்கு ஒரு மாதம் முழுவதும் உணவு வழங்க முடியும், அதாவது 30 நாட்களுக்கு அந்த நாய் வயிறு நிறைய உணவு சாப்பிடுவதற்கான உதவியைச் செய்யலாம் என்றும் கூறியிருக்கிறார்.
இதோடு நிறுத்தாமல், இந்த தீபாவளிக்கு தன்னுடன் ரசிகர்களும் இணைந்து ஒரு நாயின் உணவுச் செலவை ஏற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். ரூ.1,000 நன்கொடை அளித்து ஒரு நாயின் வாழ்க்கையில் கொஞ்சம் மகிழ்ச்சியை கொண்டு வரலாம் என்றும், இதற்காக ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா அமைப்புக்கு நன்கொடை அளிக்குமாறும் கேட்டிருக்கிறார். இறுதியில், அவர்களுக்கும் இந்த தீபாவளி சிறப்பானதாக அமையட்டும் என்று வாழ்த்தியிருக்கிறார்.

