தேர்ச்சி பெற வேண்டுமானால் இதை செய்! – மருத்துவ மாணவியைச் சீரழித்த அரசு டாக்டர்..!

 
1

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க மருத்துவ மாணவி ஒருவர் இந்த கல்லூரியில் பயின்று வந்தார். அவரிடம் அரசு மருத்துவக் கல்லூரியில் அவசரப் பிரிவில் பணியாற்றி வரும் ஓம் பிரகாஷ் என்ற மருத்துவர் அடிக்கடி அக்கறையாக பேசி வந்துள்ளார். உனக்கு படிப்பில் எந்த டவுட் இருந்தாலும் தன்னிடம் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம், நான் சொல்லித்தர தயாராக இருக்கிறேன் என மிகுந்த அக்கறையுடன் மாணவியிடம் கூறி வந்துள்ளார்.

இந்த சூழலில் தேர்வு நெருங்குவதையொட்டி மாணவியை அழைத்த மருத்துவர் ஓம் பிரகாஷ், தேர்வில் வெற்றி பெற உதவி செய்வதாக கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளார். மாணவியும் தேர்வுக்கு தேவையான டிப்ஸ் ஏதேனும் வழங்குவார் என நினைத்து அவரை நம்பி சென்றுள்ளார். உதகையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு மாணவியை அழைத்துச் சென்ற மருத்துவர் அங்கு மது அருந்தி இருக்கிறார். இதனால் அச்சமடைந்த மாணவியிடம் யூனிவர்சிட்டியில் பேசி தேர்வில் வெற்றி பெற வைப்பதாக ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்

சிறிது நேரத்தில் அவருக்கு போதை தலைக்கேறிய நிலையில், மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி மருத்துவரிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், மாணவியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அங்கு சென்ற ஓட்டல் ஊழியர்கள் மாணவியின் நிலை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை செய்தபோது போதையில் மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியை உதகையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் புகாரைப் பெற்றனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார் அரசு மருத்துவர் ஓம் பிரகாஷை அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஓம் பிரகாஷ் சென்னையைச் சேர்ந்தவர் என்றும், ஏற்கனவே 2 திருமணங்கள் ஆன நிலையில் 2 மனைவிகளும் அவரைப் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. தனிமையாக உதகையில் பணியாற்றி வந்த அவர் வேறு எந்த மாணவியிடமாவது அத்துமீறியிருக்கிறாரா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.