தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுக - அதிமுக கூட்டுச்சதி: எம்.எல்.ஏ. முஸ்தபா பகிரங்க குற்றச்சாட்டு..!!
மதுரை விமான நிலையில் தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
திமுகவும், அதிமுகவும் இணைந்து தற்போது ஒருவேலை பார்த்துக்கொண்டிருக்கிறது. தவெக வெற்றிபெறாது என திமுகவும், அதிமுகவும் நினைத்தது. ஆனால், தவெக வெற்றிபெற்று நல்லாட்சி தருவதை இந்த ஆட்சியை கெடுக்க திமுகவும், அதிமுகவும் முயற்சிக்கிறது.
திமுகவும், அதிமுகவும் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களை வாங்க குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றன. குதிரை பேரத்தில் ஈடுபட எனக்கே செல்போன் அழைப்பு வந்துள்ளது. என்னையே தொடர்புகொண்டு நீங்கள் முதலில் 15 கோடி ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள், நாங்கள் (திமுக, அதிமுக) சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம். அப்போது நீங்கள் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்து பின்னர் 15 கோடி ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் என மொத்தம் ரூ. 30 கோடி பேரம் பேசினர். இது குறித்து தலைமையிடம் நான் கூறியுள்ளேன்.
திமுக, அதிமுகவால் மக்கள் மன்றத்தில் வெற்றிபெற முடியவில்லை. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க முயல்கின்றனர். இந்த பேரத்தில் அதிமுகவினர் ஈடுபடுகின்றனர். மதுரையை சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகி என்னை தொடர்புகொண்டார். தவெக ஆட்சியை கெடுப்பதற்கு எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர்.
தவெக எம்.எல்.ஏ.க்கள் ரூ. 100 கோடி கொடுத்தாலும் வரமாட்டார்கள். இந்த குதிரைபேர கூட்டுச்சதியில் திமுக, அதிமுக சேர்ந்துதான் ஈடுபட்டுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் இதை யார் செய்தார்கள் என்று வெளிவரும். அதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
35 கட்சிகள் கூட்டணியுடன் திமுக தேர்தலை சந்தித்தது. அதிமுகவுடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை. யாருடனும் கூட்டணி வைக்காமல் தவெக 35 சதவீத வாக்குகளை பெற்று வரலாறு படைத்து ஆட்சியை பிடித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திமுகவும், அதிமுகவும் இணைந்து குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா குற்றஞ்சாட்டியுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

