“இதுக்கு மட்டும் எங்கிருந்து வந்தது பணம்?”- உதயநிதி ஸ்டாலின்
வீட்டு பக்கத்துலயே தலைமைச் செயலகம் கட்டுறதுக்கு மட்டும் கஜானால பணம் இருக்கா? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் பதவி ஏற்கின்ற நாளன்று என்ன சொன்னார்? கஜானாவை முழுமையாகத் துடைத்து வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள், சுத்தமாகப் பணமே இல்லை என்று சொன்னாரா இல்லையா? இன்றைக்கு என்ன அறிவிப்பு கொடுத்திருக்கிறார். அவர் வீட்டிற்கு அருகிலேயே 1,200 கோடி ரூபாயில் புதிய சட்டமன்றப் பேரவை அமைக்கப்படும் என்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய கார் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். யாராவது கேட்டோமா இதை? எங்கிருந்து வந்தது பணம்? மக்கள் இன்றைக்கு உணரத் தொடங்கிவிட்டார்கள். ‘நாம் தவறு செய்துவிட்டோம், தி.மு.க.வை இழந்துவிட்டோம்’ என்ற ஒரு வருத்தத்தில், மக்கள் இன்றைக்கு உணரத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடு சட்டமன்றத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியுடன் ஒப்பிடும் அளவுக்கு அதன் மாண்பை குறைத்துவிட்டார்கள்!
மற்றவர்கள் வீட்டில் எல்லாம் சென்று பேசுவதற்கு முன்னால், நம் கழக நிர்வாகிகள், நம் கட்சியினர், இளைஞர் அணித் தம்பிமார்கள், நிர்வாகிகள் உங்களுடைய வீட்டில் முதலில் பேசுங்கள். கடந்த முறை நாம் செய்த தவறு, மிகப்பெரிய தவறு அதுதான். இந்த அரசாங்கம் இந்த நான்கு மாதங்களில் என்னென்னவெல்லாம் தவறாகச் செய்திருக்கிறார்கள் என்று ஞாபகப்படுத்துங்கள். முதலமைச்சர் விஜய் சினிமாவில் நடித்ததை விட சட்டசபையில் நன்றாகவே நடிக்கிறார். நடிக்காமல், எதை வேண்டுமானாலும் பேசுங்கள். பஞ்ச் டயலாக் பேசாமல் எது வேண்டுமானாலும் பேசுங்கள் CM சார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் சொல்கிறார், “எங்களுக்கு இங்குப் பின்னாலிருந்து முதலமைச்சரின் முகம் தெரியவில்லை, எங்களுக்கெல்லாம் தெரியும் வகையில் தொலைக்காட்சித் திரை வையுங்கள்” என்று; நான் கூறினேன், “நாங்கள் வேண்டுமானால் எழுந்து சென்றுவிடுகிறோம், நீங்கள் வேண்டுமானால் இங்கு வந்து அமர்ந்து கொள்ளுங்கள். எதிர்க்கட்சி வரிசையில், எங்களால் இங்கு அமர முடியவில்லை” என்று. “அவர் அப்படியே பேசி கிழித்துவிடுகிறார்,” அவரைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள். சம்பந்தம் இல்லாமல் பேசி, ஆக்சன் செய்து திரைப்படங்களைவிட தற்போது நன்றாக நடித்து வருகிறார். நான் கூட எழுந்து ஏதோ பதில் சொல்லப் போகிறார் போலும், சரி நாம் கேட்ட கேள்விக்கு ஏதோ பதில் வைத்திருக்கிறார் என்று சொல்லுவார் என்று பார்த்தால், கீழே குனிந்து மேலே பார்ப்பதற்குள் ஆளையே காணோம்.” என்றார்.

