சேகர் பாபு மீது கோபம் அல்ல, வருத்தம்- உதயநிதி ஸ்டாலின்
முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது கோபம் அல்ல, வருத்தம் உள்ளது என எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை பாரிமுனையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “ சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதல்முறையாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்களின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்குகிறார். இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சியை தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை. எந்தக் கேள்வி கேட்டாலும் தவெக அமைச்சரவையில் 3 பேர் மட்டும்தான் பதில் சொல்வார்கள். எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால் துறை ரீதியான அமைச்சர்களிடம் பதில் இல்லை. சட்டப்பேரவையில் மடைமாற்றம் செய்யும் வேலையைத்தான் தவெக அமைச்சர்கள் செய்கிறார்கள்.
ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துவது திமுக பக்கம் வரும் GenZ இளம் தலைமுறையினர்தான். திமுக-வின் சாதனைகளைப் பார்த்து கழகத்திற்கு வரும் அவர்களையும் டார்கெட் செய்து தொடர்ந்து கைது செய்து வருகிறது தவெக அரசு. இதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது திமுக. முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது கோபம் அல்ல, வருத்தம் உள்ளது. வருத்தம் மட்டுமல்ல சேகர்பாபு மீதும், இந்த மாவட்டம் மீதும் இருக்கும் உரிமை. திமுக அரசின் சாதனைகள் இளம் தலைமுறையினரை சென்றடையவில்லை எனக் கூறி நம்மை நாம் சமாதானம் செய்து கொள்ளலாம். 4 மாதங்களுக்கு பிறகு சென்னை கிழக்கும் மாவட்டத்துக்கு வந்துள்ளேன்” என்றார்.

