"இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் அதிமுகவையே பாஜகவுடன் இணைத்து விடுவார்"... பழனிசாமியை விமர்சித்த உதயநிதி
இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் அதிமுகவையே பாஜகவுடன் இணைத்து விடுவார் என எடப்பாடி பழனிசாமியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.

சென்னை ஆர்.கே.நகரில் திமுக சார்பில்,'எளியோர் எழுச்சி நாள்' என்ற பெயரில் 48 இணைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். மணமக்களுக்கு கட்டில், மெத்தை, பீரோ, மிக்சி என 30 பொருட்கள் திருமண பரிசாக வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு மணமக்களுக்கு தலா ரூ.25000 மொய் வழங்கபட்டன.

திருமணம் நிறைவு பெற்ற பிறகு நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திமுக ஆட்சியின் திட்டங்களை மக்கள் கொண்டாடுவதை பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு கோவம் வருகிறது. அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பது பற்றி இபிஎஸ் கேள்வி கேட்கிறார். கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சியின் பெயரை வைக்கலாமா? எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை வைத்தாலும் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார், அவருக்கு அமித்ஷா, மோடி பெயரை வைக்க வேண்டும். எந்த நேரத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் ஐடி ரெய்டு நடந்த மறுநாளே 'தேர்தல் நேரத்தில் இதுகுறித்து பேசிக்கலாம்' எனச் சொல்லிவிட்டார். இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் அதிமுகவையே பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்துவிடுவார்” என்றார்.


