"கவனமாக செயல்பட வேண்டும்"- எம்.எல்.ஏக்களுக்கு உதயநிதி அட்வைஸ்
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பேரவையில் திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள், வியூகங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் காணொலி காட்சி மூலம் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தமிழக அரசின் 2026-2027ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 5ம் தேதியும், வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6ம் தேதியும் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். திமுக MLAக்களில் பெரும்பாலானோர் சீனியர்களாக இருப்பதால் புதிய MLAக்களை முறையாக வழிநடத்த உதவுவது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சட்டமன்ற கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரப்பப்படுவதால் சட்டமன்றத்தில் கவனமாக செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திமுகவில் உள்ள சீனியர் MLA-க்கள், புதிய சட்டமன்ற உறுப்பினர்களை முறையாக வழிநடத்த உதவ வேண்டும். நிதிநிலை அறிக்கை தொடர்பாக எழுப்ப வேண்டிய கேள்விகளை திமுக MLA-க்கள் இப்போதே தயார் செய்துகொள்ள வேண்டும்” என அறிவுறுத்தினார்.

