“பாஜகவைக் கண்டு அஞ்சும் முதலமைச்சர்”- உதயநிதி ஸ்டாலின்

 
“பாஜகவைக் கண்டு அஞ்சும் முதலமைச்சர்”- உதயநிதி ஸ்டாலின்

காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என நம்புகிறேன். ஆனால், 116 நாட்களில் 550 குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.


சட்டமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தவெக அரசை விமர்சித்தால் எதிர்க்கட்சியினரை உடனடியாக கைது செய்யும் காவல்துறை, முதலமைச்சரை நேரடியாக விமர்சிக்கும் பாஜக தலைவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை? ஏன் புகார்கூட கொடுக்கவில்லை? ‘எங்களுக்கு வந்தால் ரத்தம்; அவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?’ பாஜக அடித்தாலும், வலித்தாலும் வெளியே சொல்லக் கூடாது என்ற அரசியல் உத்தியை இதுவரை யாரும் பார்த்ததில்லை. தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்துள்ளது. முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறையும், உளவுத்துறையும் செயலிழந்துவிட்டதா? குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை, அரசை விமர்சிக்கும் Gen Z இளைஞர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்கிறது. 

காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என நம்புகிறேன். ஆனால், 116 நாட்களில் 550 குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 10 சாதிய ஆணவப்படுகொலைகள், 8 காவல் மரணங்கள் நடந்துள்ளன. ஆட்சிக்கு வந்து 4 மாதம்தான் ஆகிறது என்பது தேர்தல் வாக்குறுதிகளுக்கு வேண்டுமானால் பொருந்தும். சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு அது பொருந்தாது. உங்களிடம் கேள்வி கேட்டு சரியான பதிலைப் பெற வேண்டிய பொறுப்பை மக்கள் கொடுத்துள்ளனர். ரீல்ஸ் கன்டென்ட், ரோல் கேமரா, ஆக்ஷன், குட்டிக் கதை சொல்லாமல் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். இன்னும் திமுகதான் ஆட்சி செய்கிறது என்ற நினைப்பை எடுத்துவிட்டு முதல்வர் பதிலளிக்க வேண்டும்” என்றார்/