பிப். 12ஆம் தேதி தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு

 
dmk dmk

ஒன்றிய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து பிப்ரவரி 12 அன்று தொழிற் சங்க அமைப்புகள்  நடத்தும் வேலைநிறுத்தத்திற்கு  தி.மு.க. ஆதரவு அளிப்பதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய தொழிற்சங்கங்கள், தொழில்வாரி தொழிற்சங்கங்கள், துறை வாரியான தொழிற்சங்க சம்மேளனங்கள், விவசாய அமைப்புகள் இணைந்து ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத, ஜனநாயக விரோத மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து நடைபெறுகிற வேலை நிறுத்தத்தில் ஒன்றிய அரசாங்கம் தன்னிச்சையாக மாநில அரசு களை கலந்து ஆலோசிக்காமலும், தொழிற்சங்கங்களோடு முறையாக கலந்து ஆலோசிக்காமலும், நாடாளுமன்றத்தில் விவாதமின்றியே நிறை வேற்றிய 4 தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென்பதும், மின்சார சட்டத்தை திருத்துவதன் மூலம் உற்பத்தி பகிர்மானம் போன்ற வைகள் தனியார் மயமாக்கும் அபாயம் உள்ளதையும்,

விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாயமான விலை வழங்குவோம் என்ற உத்திரவாதத்தை இதுவரை நிறைவேற்றாததை கண்டித்தும், விதைகள் சட்டத்தை திருத்தம் செய்து சிறு குறு விவசாயிகள் கைவசம் உள்ள விதை களை செயல்படாமல் செய்யும் போக்கை கண்டித்தும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை பெயர் மாற்றம் செய்து ஒன்றிய அரசின் பொறுப்பை தட்டிக் கழித்து மாநிலங்களின் நிதிச் சுமையை கூடுதலாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டுமென்பதை வலியுறுத்தியும் நடைபெறுகிற வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்கிற நல்ல நோக்கத்தோடு திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.