தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர் - துணைஅமைப்பாளர்கள் கூட்டம்!

 
arivalayam

தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் இன்று 29.01.2024 திங்கட்கிழமை, காலை 10.00 மணியளவில், கோவை, பீளமேடு, காளப்பட்டி சாலை “சுகுணா கலையரங்கில்”, கழக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., தலைமையில், அணியின் தலைவர் இரா.ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர்கள் பூவை சி.ஜெரால்டு, எஸ்.மோகன், துணைச் செயலாளர்கள் மன்னை த. சோழராஜன், சேலம் ரா. தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா. அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், திருமதி பூர்ணசங்கீதா சின்னமுத்து, திருமதி ஜெ. வீரமணி ஆகியோர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
            கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. ஆ. ராசா, எம்.பி., அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றி, கழக மாணவர் அணிக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்.
            இக்கூட்டத்தில், கோவை வடக்கு மாவட்டக் கழக செயலாளர்  திரு.தொ.அ. ரவி, கோவை தெற்கு மாவட்டக் கழக செயலாளர்  திரு. தளபதி முருகேசன் மற்றும் கோவை மாநகர் மாவட்டக் கழக செயலாளர் திரு. நா. கார்த்திக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டனர்.
            இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட, மாநில மாணவர் அணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-
தீர்மானம் - 1

stalin
இளைஞர் அணி மாநாட்டில், இளந்தலைவர் எழுப்பும் மாநில உரிமை மீட்பு முழக்கத்தை, தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் கழக மாணவர் அணியினர் கொண்டு செல்வோம்! வென்று முடிப்போம்.
வளமான மாநிலங்களே, வலிமைமிக்க ஒன்றியத்தை உருவாக்கும் என்ற உன்னத நோக்கத்தோடு, இந்திய துணைக்கண்டத்தில் இருக்கும் அத்தனை மாநிலங்களின் மாநில உரிமையை மீட்டெடுக்கும் வகையில், பெரியார் – அண்ணா – கலைஞர் ஆகியோர் வழியில், கழகத் தலைவர்-        மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையேற்று,  கழக இளைஞர் அணிச் செயலாளர்-மாண்புமிகு அமைச்சர், இளந்தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்மொழிந்து நிறைவேற்றிய “மாநில உரிமை மீட்பு” தீர்மானங்களை, தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும், மூலை முடுக்கெங்கும், மாணவ, இளைஞர் சமுதாயத்திடம் கழக மாணவர் அணியினர் கொண்டு செல்வதை முதல் கடமையாக கருதி மாணவர் அணியின் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
மாநில உரிமைகளை மீட்போம்! வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்! வலிமைமிக்க இந்தியாவை காப்போம்! என்ற பணியினை கழக மாணவர் அணியினர் வருங்கால தலைமுறையினராய் விளங்குகின்ற மாணவர்களிடம் கொண்டு சேர்ப்போம்!  வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலை வென்று காட்டுவோம்!  இந்திய ஒன்றியத்தை பாசிசத்திடமிருந்து மீட்டெடுப்போம்! என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் - 2
கழக இளைஞர் அணி மாநாட்டில், மாணவர் அணிக்கு பெருமை தந்த கழகத் தலைவர் - இளந்தலைவர் ஆகியோருக்கு நன்றி!
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டில், இந்திய அரசியலில் திருப்புமுனை மாநாடாகவும், தமிழ்நாட்டு வரலாற்றில் தடம் பதிக்கக்கூடிய மாநாடாகவும், “மாநில உரிமை மீட்பு” முழக்கத்தை முன்மொழிந்து நடைபெற்ற கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டினை திறந்து வைத்து, தொடக்க உரை வழங்கும் பெருமைமிகு வாய்ப்பை கழக மாணவர் அணியின் செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன், எம்.எல்.ஏ., அவர்களுக்கு வழங்கிட்ட கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், கழக இளைஞர் அணிச் செயலாளர்-மாண்புமிகு அமைச்சர், இளந்தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் இக்கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் - 3

M.K.Stalin
கழக மாணவரணியினர் கருத்தியல் வலிமைமிக்கவர்களாய் விளங்கிட கருத்தியல் பயிலரங்கம் நடத்த அனுமதி வழங்கிட்ட கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி!
            தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிந்தனை, சொல், செயல் வடிவமாய் விளங்கும் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழக இளைஞர் அணிச் செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் இளந்தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு, திராவிட இயக்க சிந்தனை, கொள்கை, இலட்சியம், கோட்பாடுகள் ஆகிய கருத்தியலில் வலிமைமிக்கவர்களாகவும், இளைய தலைமுறையான மாணவ சமுதாயத்தினரிடம் திராவிட இயக்க சிந்தனை, கொள்கை ஆகியவற்றினை விதைக்கக் கூடியவர்களாக விளங்கிட வேண்டுமென்பதற்காகவும், அரசியலில் களமாடக்கூடிய முன்கள போர் வீரர்களாய் மாணவர் அணியினர் விளங்கிட வேண்டுமென்று, தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களுக்கு மூன்று நாள் கருத்தியல் பயிலரங்கம் நடத்த அனுமதி வழங்கிட்ட கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!
            நடைபெற்ற இரண்டு கருத்தியல் பயிலரங்கத்தில் பங்கேற்ற மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்! 
தீர்மானம் - 4
டெல்லியில் நடைபெற்ற மாபெரும் மாணவர் பேரணியை வெற்றியடைய உறுதுணையாக இருந்த மாவட்ட, மாநில அமைப்பாளர்-துணை அமைப்பாளர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
கடந்த 03.01.2024 அன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற மாணவர் அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையேற்று, கழக இளைஞர் அணிச் செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் இளந்தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு, “யுனெடெட் ஸ்டூடென்ஸ் ஆஃப் இந்தியா” (United Students of India) என்ற மாணவர் கூட்டமைப்பு சார்பில், தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் அதை கொண்டு வந்த பாசிச பா.ஜ.க. அரசை நிராகரிப்போம்! - இந்தியாவை காப்போம்! கல்வி உரிமையை காப்போம்!! - என்ற முழக்கத்தோடு, கடந்த 12.01.2023 அன்று தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கிய மாபெரும் மாணவர் பேரணி (Parliament March) எழுச்சியுடன் நடைபெற்றது.  அப்பேரணியில் பல்வேறு மாணவர் அமைப்புகள் பங்கேற்றிருந்தாலும், நமது கழக மாணவர் அணியினரின் பங்களிப்பு பெருமளவு எழுச்சியை தந்தது.  அப்பேரணி பெரும் வெற்றியடைய பங்காற்றிய கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களுக்கு, தலைமைக் கழக மாணவர் அணி நன்றிகளையும், நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.  
தீர்மானம் - 5

stalin
 “01.02.2024 சென்னையில் எழுச்சிமிகு மாணவர் பேரணி – இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எழுச்சியுரை”
இந்தியாவின் வடக்கே நடைபெற்ற பேரணியைத் தொடர்ந்து, தெற்கே சென்னையில் “மாபெரும் மாணவர் பேரணி”-ஐ யுனெடெட் ஸ்டூடென்ஸ் ஆஃப் இந்தியா (United Students of India) கூட்டமைப்பு நடத்த முடிவெடுத்ததன் அடிப்படையில் வரும், 01.02.2024 அன்று சென்னையில் மாபெரும் மாணவர் பேரணி நடைபெற உள்ளது.
இப்பேரணியில் இந்திய அளவிலான பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துக் கொள்ளவுள்ள நிலையில், பேரணியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைக்கிறார்.  பேரணியின் நிறைவில், கழக இளைஞர் அணிச் செயலாளர்-மாண்புமிகு அமைச்சர், இளந்தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எழுச்சியுரை ஆற்ற உள்ளார்.
இந்தியாவை காக்கவும், மாணவர்களின் கல்வி உரிமையை காக்கவும் நடைபெறும் இம்மாபெரும் பேரணியில், தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில நிர்வாகிகள், மாணவர் அணியினர், தமிழ்நாடு, புதுவையிலுள்ள பல்வேறு கல்லூரிகளின் தி.மு.க. மாணவர் அமைப்பைச் சார்ந்த 15,000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொள்வதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் - 6
“மாணவ நேசன் – முத்தமிழறிஞர் கலைஞர் 100 பேச்சும் எழுத்தும்” மாநில அளவிலான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள்!
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கழக மாணவர் அணிக்கு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்திட ஆணையிட்டார்கள்.  அதன்படி, பேச்சு, எழுத்து என இரண்டிலும் தனி அடையாளத்துடன் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞரின் சிறப்புகளை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் வளர்த்தெடுக்கும் வகையில், அனைத்து கழக மாவட்டங்களிலும் கழக மாணவர் அணியின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் மிகச் சிறப்புடன் நடைபெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 
அதனைத்தொடர்ந்து, மாவட்ட அளவில் தேர்வானவர்களுக்கு மாநில அளவில் “மாணவ நேசன் – முத்தமிழறிஞர் கலைஞர் 100 பேச்சும் எழுத்தும்” இறுதிப் போட்டிகளை வரும் பிப்ரவரி மாதத்தில் நடத்துவதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.  மேலும், மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை உடனடியாக அளித்திட மாவட்ட அமைப்பாளர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் - 7
“தமிழ் மாணவர் மன்றம்” – தமிழ்நாடு, புதுவை முழுவதும் உள்ள கல்லூரிகளில் உறுப்பினர்களை சேர்த்திடுவீர்!
            திரா­விட இயக்­கத்­தின் கொள்­கைப் பாதை­யில் மாணவர்­களை          ஒன்றினைத்து, தாய் தமிழ் மொழிக்கு ஆபத்து என்று வந்த போது, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் தன்னுடன் பயின்ற பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து, ‘இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு’ என்ற இயக்கத்தைத் தொடங்கி அதன் மூலம் இந்தி எதிர்ப்புப் பேரணிகளையும் இந்த அமைப்பின் மூலம் நடத்தினார். மேலும், தனது 17 வயதில், ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றமே, திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் அணி என்ற சிறப்பைப் பெற்றது. நமது கழகத்தின் மூத்த முன்னோடிகளாக இருந்து நம்மை வழிநடத்திய பேராசிரியர் பெருந்தகை க. அன்பழகன், நாவலர் இரா.நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன் உள்ளிட்ட திராவிட இயக்க முன்னோடிகள் இந்த அணியில் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

mk stalin
பெருமைமிகு கலைஞர் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து வரும் நமக்கு, மீண்டும் தமிழ் மாணவர் மன்றத்தை உருவாக்கிடும் பொன்னான வாய்ப்பினை நமது கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நமக்கு அளித்துள்ளார். 
கல்லூரிகளில் பயிலும் திராவிடக் இயக்க சிந்தனைக் கொண்ட மாணவர்களை ஒன்றினைத்து, அரசியல் சார்பற்று கல்லூரி மாணவர்களின் தேவைகளை, பிரச்சனைகளையும் பூர்த்தி செய்யும் வண்ணம் செயல்படவும், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் கலை உணர்வு, தமிழின தொன்மையும், பெருமைகளையும் இளைய தலைமுறையினர் அறியும் வண்ணம் செயல்படவும், பகுத்தறிவு - சுயமரியாதை - சமூகநீதி - சமத்துவம் ஆகிய கொள்கைகளை கருத்தியல் பரப்புரை செய்திடவும், மேலும் மாணவர்களிடம் திறன் மேம்பாட்டினை உருவாக்க பயிற்சிகளும், ஊக்குவிக்கும் வகையில் போட்டிகளையும் நடத்திடும் வகையில் இம்மன்றம் செயல்படும்.
எனவே, கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் “தமிழ் மாணவர் மன்றம்” உருவாக்கிடும் பணியினை விரைவாக துவக்கிட இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் - 8
இடஒதுக்கீடு முறையை சதி செயல் மூலம் அழிக்க நினைக்கும் யு.ஜி.சி.க்கு தி.மு.க. மாணவர் அணியின் கடும் கண்டனங்கள்!
இந்திய சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, கல்வி ஒரு சாதிக்கு மட்டும் இருந்த நிலையை மாற்றி எல்லோருக்கும் கல்வி வேண்டுமென 16-09-1921 அன்று நீதிக்கட்சி அரசு வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை வெளியிட்டு, இந்திய சட்டமன்ற வரலாற்றில் முதன்முதலில் இட ஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தியது. 1928ஆம் ஆண்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டம் நிரந்தரமாக்கப்பட்டது.  இதனால், அரசியல் – கல்வி – வேலைவாய்ப்பு உரிமை அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கிடைத்தது! 
            வகுப்புவாரி உரிமையை எதிர்த்து இடைஇடையே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வந்த போது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெரும் முயற்சியால் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் அதை வென்று காட்டி, அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தை கொண்டு வந்து எல்லோருக்கும் படிக்கிற உரிமையை மீட்டெடுத்துள்ளது.
வருணாசிரம அடிப்படையில், சாதியின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்ற உரிமைகள் மறுக்கப்பட்டதோ, அதே முறையில் அவர்களுக்கு வழங்க வேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இடஒதுக்கீட்டு கொள்கை. 
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கப்பெற வேண்டுமென்ற சமத்துவ நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டை சிதைப்பதற்காக உள்நோக்கத்துடன், திட்டமிட்டே இடஒதுக்கீட்டுப் பிரிவில் தகுதியானவர்கள் இல்லை என்று கூறி, உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி, ஒ.பி.சி. பிரிவில் காலியாக உள்ள இடங்களை பொது பிரிவினரை கொண்டு நிரப்ப நினைப்பது மீண்டும் இடஒதுக்கீட்டு கொள்கையை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான பாசிச பா.ஜ.க. அரசின் அடித்தளம்.
வருணாசிரம, சனாதனத்தை தூக்கிபிடிக்கும் பா.ஜ.க. பெரும் சதி திட்டத்தை செய்து, பல்கலைக் கழக மானியக் குழுவிக்கு இல்லாத அதிகாரத்தை அவர்கள் உருவாக்க நினைப்பது ஒரு சதி திட்டமாகும். 
கடந்த டிசம்பர் 28-ல் இடஒதுக்கீடு ரத்து தொடர்பாக வரைவு அறிக்கை வெளியிட்டு, அதன் மீது ஜனவரி 28-க்குள் கருத்து தெரிவிக்கலாம் என்று சொல்லி அறிவிப்பு வெளியிட்டது யு.ஜி.சி. இடஒதுக்கீடு பற்றி முடிவெடுப்பதற்கு யு.ஜி.சி.-க்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை ஏன் இத்தனை நாள் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கல்வித்துறை அமைச்சர் மறுப்பு தெரிவிக்க மறந்திருந்திருக்கிறார்.  மறந்திருந்தார் என்றுச் சொல்வதை விட, குட்டி விட்டு ஆழம் பார்க்கலாம் என்ற ஒரு பெரும் சதி திட்ட நோக்கத்திலேயே இதை நிறைவேற்றி விடலாம் என்று காத்திருந்தனர். 
ஒவ்வொரு முறையும் இந்தியாவில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான சதிகள் வருகிற போதும், அதை எதிர்த்து குரல் கொடுக்கின்ற மண்ணாக, போராடுகிற மண்ணாக தந்தை பெரியாரின் திராவிட இயக்க மண்ணாக தமிழ்நாடு விளங்குகிறது.  அவர் வழியில், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இப்போதைய நமது கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இடஒதுக்கீட்டினை காத்து கொண்டிருக்கும் அரணாக விளங்குகிறார்கள். 
அந்தவகையில், இப்போதும் தமிழ்நாட்டிலிருந்து கிளம்பிய எதிர்ப்பு குரல் பா.ஜ.க.-வை எச்சரித்துள்ளது.  அதை உணர்ந்த பா.ஜ.க. அப்படி அறிவிக்கவில்லை என்று பின்வாங்கியுள்ளது.  பா.ஜ.க.வின் சதிதிட்டத்தை தமிழ்நாடு விழிப்புணர்வோடு உணர்ந்து கொண்டதற்கான காரணம் திராவிட இயக்கம் தந்த கல்வியே!  அந்த விழிப்புணர்வு இந்தியா முழுமையும் பெற வேண்டுமென்ற கழகத் தலைவர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இனியும் இதுபோன்ற இடஒதுக்கீட்டிற்கு எதிரான எந்த செயலையும் செய்ய பா.ஜ.க. அரசு முற்படக்கூடாது என தி.மு.க. மாணவர் அணி எச்சரிக்கிறது.  அரசியல் அமைப்பு சட்டம் வழங்காத அதிகாரத்தை தனக்கு இருப்பதாக நினைக்கிற யு.ஜி.சியின் தலைவராக விளங்கும் ஜெகதீஷ்குமார் அறிவித்த அறிவிப்பு மிகப்பெரிய கண்டனத்திற்குரியது.  யு.ஜி.சியை எதிர்த்தும், இடஒதுக்கீட்டிற்கு எதிரான தனது சதிதிட்டத்தை நிறைவேற்ற நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு தி.மு.க. மாணவர் அணி கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.