“காங்கிரஸ் தலைவர் வாயை அடக்க வேண்டும்! இல்லையென்றால் அடக்கப்படும்”- திமுக அறிக்கை

 
dmk

கூட்டணியில் இல்லாத கழகத்தை நோக்கிக் கூவும் காங்கிரஸ் தலைவர் வாயை அடக்க வேண்டும்! இல்லையென்றால் அடக்கப்படும் என காங்கிரஸ்க்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

Image

இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூட்டணியில் இல்லாத கழகத்தை நோக்கிக் கூவும் காங்கிரஸ் தலைவர் வாயை அடக்க வேண்டும்! இல்லையென்றால் அடக்கப்படும்!சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பே, தனது திமிர்ப்பேச்சுகளால், தமிழ்நாட்டில் வலுவாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணியைச் சீர்குலைத்த த.வெ.க. அடிமை மாணிக்கம் தாகூர் மீண்டும் தனது வாய்த்துடுக்கை வெளிப்படுத்தியுள்ளார். கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், கழகச் செயல்வீரர்கள் களத்தில் ஆற்றிய பணியை அங்கீகரிக்கும் விதத்திலும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பேசிய பேச்சை எடுத்து வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நேர்மையற்ற SIR நடவடிக்கைக்கு வக்காலத்து வாங்குகிறார்.  இதனைக் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை ஏற்கிறதா? SIR-இல் இதுதான் அவர்களது நிலைப்பாடா?

தமிழ்நாட்டில் SIR-ஆல் மக்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்கத் தங்களால் இயன்றவரை தி.மு.க.வினர் பாடுபட்டனர். படிவங்களை நிரப்பிச் சமர்ப்பிக்க மக்களுக்கு உதவினர். எனினும், வரைவு வாக்காளர் பட்டியலிலும் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியலிலும் பலரது பெயர்கள் இடம்பெறாமல் போனது அனைவரும் அறிந்த உண்மை. இப்படி ஊரறிந்த உண்மையைத்தான் இந்தத் த.வெ.க. கால் அமுக்கி மாணிக்கம் மறைக்கிறார்.உண்மையில், தி.மு.க.வின் தோல்விக்கு S.I.R.-உடன் சேர்த்து மற்றொரு காரணமும் இருக்கிறதுதான். அதனை மறுப்பதற்கில்லை. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டே, தினமும் தி.மு.க. குறித்து மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி போன்ற காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில புல்லுருவிகள் தெரிவித்த கருத்துகளும் ஒரு காரணமாக அமைந்தன. இதனால், கூட்டணியின் நற்பெயரும் ஒற்றுமையும் பொதுவெளியில் கேள்விக்குள்ளானது. தி.மு.க. கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிலும் அங்கம் வகித்துக் கொண்டே, வேறு கட்சியின் ஸ்லீப்பர் செல்களாக இவர்கள் செயல்பட்டார்கள். இதனால், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கூட்டணியின் வெற்றிக்காக உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பும் சேர்ந்து வீணானது. காங்கிரஸ் கட்சியில் இருந்த இத்தகைய அழுகிய பிணங்களின் சுமையைச் சேர்த்துச் சுமந்ததும் கழகத்தின் வாக்குகள் சரிய ஒரு காரணமாக அமைந்துவிட்டது. அந்தச் சுமையைத் தூக்கி எறிந்தபின்னர் மக்களிடம் கழகத்துக்கான ஆதரவு தற்போது பன்மடங்கு பெருகியிருக்கிறது. கழக உடன்பிறப்புகள் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறார்கள். நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகளும் அதைத்தான் சொல்கின்றன.

மாணிக்கம்தாகூர்

“தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.” என்று கூற மாணிக்கம் தாகூருக்கு முதலில் என்ன தகுதி இருக்கிறது? தமிழ்நாட்டில் SIR-க்கு எதிராகப் போராடிய இளைஞர்கள் தவெக அரசால் கைது செய்யப்பட்டபோது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை விடுவிக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் என்ன செய்துகொண்டிருந்தது? முதலமைச்சர் விஜய் அவர்களோடு காபி குடித்துக்கொண்டிருந்தவர்கள்  கழகம் குறித்துப் பேசலாமா?இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த கட்டுரை வெளியானதும், ஞானேஷ் குமார் அவர்களைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து முதல் ஆளாக அறிக்கை விட்டவர் எங்கள் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். தொடர்ந்து இடைத்தேர்தல் பரப்புரைகளிலும் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசினார். அதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதமே, ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் அளிக்கப்பட்ட நோட்டீசிலும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.பதவிப் பிச்சைக்காக கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் தி.மு.க.வுக்குச் செய்த துரோகத்தையடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இந்தியா கூட்டணியில் இல்லாத தி.மு.க. இனி அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் இணைய வேண்டிய அவசியம் இல்லை. இணைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. இனி எங்கள் வழி, தனி வழி!

மாணிக்கம் தாகூர் சூடு, சொரணையுள்ள மனிதராக இருந்தால் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் த.வெ.க.வின் தலைவர் விஜய் ஏன் போராட்டத்தில் இணையவில்லை என்று கேட்க வேண்டும். ஞானேஷ் குமார் குறித்தோ, பா.ஜ.க. குறித்தோ, பிரதமர் மோடி குறித்தோ ஒரு வார்த்தை கூட உதிர்க்காத தொடைநடுங்கிதான் விஜய். அப்படிபட்ட தொடைநடுங்கியின் காலைக் கழுவிக் குடிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்களுக்குz தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்துப் பேசத் துளியும் அருகதை இல்லை.கடந்த இரு நாட்களாக டெல்லியில் இந்தியாவின் இளைஞர் பட்டாளம் ஒன்றுதிரண்டு ஞானேஷ் குமார் அவர்களின் பதவிநீக்கத்தை வலியுறுத்திப் போராடி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் அடக்குமுறைகளும் வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பல முன்னாள் முதலமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட இந்த அடக்குமுறையில் இருந்து தப்பவில்லை. இவற்றை எதிர்த்து தொடர்ந்து கடும் கண்டனங்களைக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து வருகிறார். திரிணாமூல் காங்கிரஸ், SFI அமைப்பினர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரே கூட இதற்காக மனப்பூர்வமாக நன்றி தெரிவித்து, கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கண்டன அறிக்கையைப் பகிர்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட எங்களைப் பார்த்துதான், “எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றால் பாஜகவை பகைத்துக்கொள்ள நேரிடும் என்று தி.மு.க. அஞ்சுகிறது” என்று மாணிக்கம் தாகூர் வார்த்தை வாந்தி எடுத்திருக்கிறார். எவரையும் கண்டு அஞ்சும் இயக்கம் அல்ல தி.மு.க.! தேர்தல் பரப்புரைக்கு இடையிலும், கருப்புடை தரித்து தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொளுத்தி பா.ஜ.க.வின் முயற்சியை வீழ்த்திய வீரர் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள். 

பாசிசம், பாயாசம் என பஞ்ச் பேசிய பக்கா பொடிமாஸ் முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை SIR மற்றும் ஞானேஷ் குமார் குறித்துப் பேசவில்லை? அவர் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா? அவரைக் கேள்வி கேட்க மாணிக்கம் தாகூருக்கு ஏன் வக்கு வகையில்லை? காங்கிரஸ் கட்சியிலேயே சில சுயமரியாதை உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்யின் கள்ள மவுனம் குறித்தும், தமிழ்நாட்டில் அவரது அரசு போராட்டங்களை அடக்குவது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், கட்சியின் தலைவராக இருக்கும் மாணிக்கம் தாகூரோ பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு, திமுகவை நோக்கிக் கூவுகிறார். இவர்களெல்லாம் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்து கழகத்துக்குப் பாடம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. அதிலும், பா.ஜ.க. எதிர்ப்பில் இந்தியாவிலேயே மிக வலிமை வாய்ந்த கூட்டணியைக் கட்டமைத்து, தொடர்ந்து இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் முழு வெற்றியைக் குவித்த தி.மு.க. குறித்து, அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி வாழ்க்கையை ஓட்டும் மாணிக்கம் தாகூர் போன்ற அட்டைப்பூச்சிகள் பேசக் கூடாது. த.வெ.க. போடும் பிஸ்கட்டுக்காக தி.மு.க. குறித்து இனிப் பேச வேண்டாம் என எச்சரிக்கிறோம். அவதூறு தொடர்ந்தால் அதற்குரிய விளைவை எதிர் கொண்டே ஆக வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.