"என்னை பொறுத்தவரை தவெக அரசு ரீல்ஸ் ஆட்சி, இன்னும் ரீல்ஸ் மோகத்தில்தான் அமைச்சர்கள் இருக்கிறார்கள்"- செந்தில் பாலாஜி

 
செந்தில் பாலாஜி

அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது தொடர்பான கேள்விக்கு பொறுத்திருந்து பார்ப்போம் என செந்தில்பாலாஜி பதில் அளித்தார்.

கோவை்ில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, “மின்வாரிய ஹார்டிஸ்க்குகள் திருடப்படுவதாக கூறியது மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி. ஹார்டு டிஸ்க் திருட்டு என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? சென்னை உட்பட பல்வேறு இடங்களில்  மின்வெட்டு காரணமாக மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். 

மின் விநியோகத்தை சீராக்க அமைச்சர் நிர்மல் குமார் செய்தது என்ன? மின்வெட்டுக்கான காரணம் குறித்து ஆய்வு கூட்டத்தை அமைச்சர் நிர்மல்குமார் நடத்தவில்லை. மின்வெட்டு பிரச்சனை உடனுக்குடன் சரி செய்யப்பட வேண்டும். மின்வெட்டை முதலில் சீரமையுங்கள், பின்னர் துறையை நீங்கள் சீரமைக்கலாம். தவெக அமைச்சருக்கு துறை சார்ந்த விவரங்கள், குறித்த புரிதல் இல்லாததால் தேவையின்றி குறை கூறுகின்றார். ஆடத் தெரியாதவர்கள் வீதி கோண என்பது போல் பேசுகின்றனர்.  மின்வெட்டு பிரச்சினையில் தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைக்க தவறான தகவல்களை தவெக அமைச்சர் பரப்புகிறார். தவெக அமைச்சர்களுக்கு நிர்வாகத் திறனே இல்லை. தமிழ்நாட்டு மக்களின் நன்மதிப்பை தவெக அரசு இழந்துவிட்டது.  என்னை பொறுத்தவரை தவெக அரசு ரீல்ஸ் ஆட்சி, இன்னும் ரீல்ஸ் மோகத்தில்தான் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அரசும் இருக்கிறது. உண்மையாக மக்களுக்கான ரியல் ஆட்சியாக இதுவரை அவர்கள் பணிகளை தொடங்கவில்லை, இனியும் தொடங்குவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை. அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம். யார் திமுகவை ஒழிப்பேன் அழிப்பேன் என்று கூறினாலும் அவர்கள் தான் ஒழிந்து போவார்கள்” என்றார்.