அண்ணாமலையின் செயல் கேலிக்கூத்தானது- ஆர்.எஸ்.பாரதி
அண்ணாமலையின் செயல் அரசியலுக்கான கேலிக்கூத்து நடவடிக்கையாக இருக்கிறது. இதனை பா.ஜ.க.வினரே ஏற்பார்களா என்பது சந்தேகம் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, “அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவமானது வேதனைக்குரிய ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதை வைத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அரசியல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அண்ணா பல்கலைக்கழகம் யாருடைய நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது என்பதனை அவர்கள் நினைவில் வைக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டு கவர்னரின் கட்டுப்பாட்டுக்கு உள்ளது என்பதனை அறிந்து இருக்க வேண்டும். குறிப்பாக இந்த அதிகாரத்தை மாநில அரசிடம் வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர்கள் பலர் கேட்டுள்ளார்கள்.
காவல்துறை அனுமதி பெற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நுழைவதை விட துணை வேந்தரின் அனுமதி பெற்று நுழைவது தான் மிகவும் சிரமம். அண்ணா பல்கலைக்கழகம் பொருத்தவரையில் 24 மணி நேரமும் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் நடந்தபோது யார் யார் இருந்தார்கள் என்பதை காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்து விடுவார்கள். குறிப்பாக சிலர் இந்த வளாகத்தில் பாதுகாப்பு இல்லை என்று கூறினால், அது யாருடைய பொறுப்பு என்பதை உணர்ந்து கூற வேண்டும். இதுபோன்ற சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட உடனே குற்றவாளிகளை கைது செய்து மாநில அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பேசக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொள்ளாச்சியில் பல மாணவிகள் கதறக் கூடிய வீடியோக்கள் ஊடகங்களில் வெளியான நிலையில் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கவில்லை, அப்பொழுது அவர் எங்கு சென்று இருந்தார்? ஆனால் நான் இந்த விஷயத்தை பொறுத்த வரையில் இந்த மாணவியை பாராட்டுகிறேன், அவர் மிகத் துணிச்சலாக காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். குறிப்பாக குற்றவாளியை கைது செய்து விசாரணை மிகவும் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது.
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்து போராட்டம் செய்துள்ளார். பொள்ளாச்சியில் பல மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பொழுது அவர் இந்த சாட்டை போராட்டத்தை ஏன் கையில் எடுக்கவில்லை? இது போன்ற போராட்டங்களில் ஈடுபட்டால் அவருக்கு ஒன்றிய அரசு சார்பில் பெரிய பதவிகள் வரும் என்று நினைக்கிறார். இது முற்றிலும் பகுத்தறிவு அற்ற செயல். நான் பல வருட காலமாக திமுகவில் இருந்து வருகிறேன். எந்த ஒரு தலைவர்களும் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டது கிடையாது. மணிப்பூர், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் அன்றாடம் நடைபெற்று வருகிறது, அதற்கு அவர் ஏன் சாட்டை போராட்டத்தில் ஈடுபடவில்லை?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் போராட்டத்தைக் கண்டு பொதுமக்கள் சிரிக்கிறார்கள். குறிப்பாக திமுக ஆட்சியை அகற்றாமல் காலணிகளை அணிய மாட்டேன் என கூறியுள்ளார். எனக்கு தெரிந்து அவர் இறுதி வரை காலனி அணியாமல் தான் நடக்க வேண்டும். அண்ணாமலையின் செயல் அரசியலுக்கான கேலிக்கூத்து நடவடிக்கையாக இருக்கிறது. இதனை பா.ஜ.க.வினரே ஏற்பார்களா என்பது சந்தேகம். திராவிட முன்னேற்றக் கழகம் பெண்களுக்கான அரசு, பெண்களை பாதுகாக்க கூடிய ஒரு அரசு. திராவிட மாடல் அரசானது அனைவருக்கான அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது போன்று தான் ஆர்ம்ஸ்டாங் கொலை வழக்கு தொடர்பாகவும் பல விமர்சனங்கள் வந்த நிலையில் தற்போது அது தெளிவாகிவிட்டது” என்றார்.