கள்ளச்சாராய மரணம்- புதுச்சேரி முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி

 
rs

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில், புதுச்சேரியில் இருந்துதான் மெத்தனால் வந்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தான் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

Image

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, “ஆணித்தரமாக சொல்கிறேன். விஷ சாராய விவகாரத்தில் பாஜகவுக்கு தொடர்பு உள்ளது. பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் புதுச்சேரியில் இருந்துதான் மெத்தனால் வந்துள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏன் கூறவில்லை? புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.

விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரும் ஈபிஎஸ், நெடுஞ்சாலை டெண்டர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தடை கோரியது ஏன்? சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் வானத்தில் இருந்தா குதித்தார்கள்? விஷ சாராய சம்பவத்தை திசை திருப்பவே பாஜக சிபிஐ விசாரணை கோருகிறது. ஆளுநர் மாளிகை, பாஜக தலைமை அலுவலகம் போல் செயல்படுகிறது.  கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களை வைத்து அதிமுக, பாஜக அரசியல் செய்கிறது.

rs bharathi

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு முன்பே முதலமைச்சர் அதிகாரிகளை அழைத்து போதைப் பொருள் கட்டுப்பாடு குறித்து விவாதித்துள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் விவாதிக்க தயாராக இல்லை. கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் நடந்த உடனேயே நீதி விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க ஒத்துழைக்காமல் எதிர்கட்சித் தலைவர் நாடகமாடுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.