மோடிக்கு 37%, ஸ்டாலினுக்கு 64%..! அடுத்து 99%- ஆர்.எஸ். பாரதி சூசகம்

 
rs

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்த 64 சதவீத வாக்குகள், வரும் பாராளுமன்ற தேர்தலில் 90 சதவீத வாக்குகளாக மாறும் என கழக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புதுச்சேரியில் தெரிவித்துள்ளார். 

rs

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழக முதல்வர் முக ஸ்டாலின்  உத்தரவின்பேரில், கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்களால் புதுச்சேரி மாநிலத்தில் கழகத்தின் 15–வது பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, மாநில அவைத் தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் கழகத்தினர் லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்கலை மாநில கழக அமைப்பாளர்  சிவா, எம்.எல்.ஏ., முன்னிலையில், தலைமைக் கழகத் தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்ட கழக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கிலின்போது தலைமை கழக அலுவலக துணை மேலாளர் தனபால், புதுச்சேரி அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கழக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும் போதே நாடாளுமன்ற தேர்தலில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிக தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றது. இப்போது முதல்முறையாக இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அதிகப்படியான பணத்தை செலவு செய்து பார்த்தார். அதுமட்டுமின்றி மிகவும் கீழ்த்தரமாக பேசினார். ஒரு முதலமைச்சராக இருந்தவர் என்பதைகூட மறந்துவிட்டு மிகவும் கீழ்த்தரமாக பிரச்சாரம் செய்தார். 

இதையெல்லாம் பார்த்த மக்கள், 64 சதவீத வாக்குகளை திமுக கூட்டணிக்கு அளித்துள்ளனர். இன்றைக்கு மோடி 37 சதவீத வாக்குகள் பெற்றுதான் பிரதமராக உள்ளார். ஆனால் 64 சதவீத வாக்குகள் கொடுத்து  முதலமைச்சருக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர். இந்த 64 சதவீத வாக்குகள் வரும் பாராளுமன்ற தேர்தலில் 90 சதவீத வாக்குகளாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது” எனக் கூறினார்.