2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக- கட்சிக்குள் ஏதேனும் கோஷ்டி பூசல் உள்ளதா? என விசாரணை
2026 சட்டமன்ற தேர்தலுக்காக ஆளுங்கட்சியான திமுக தீவிரமாக தயாராகி வருகிறது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே களை கட்ட தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக கடந்த 2023-ஆம் ஆண்டு பிரிந்த அதிமுக- பாஜக கூட்டணி தற்போது மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. அதிமுகவும் பாஜகவும் இணைந்து, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். அதேசமயம் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் உரிமைகளை அ.தி.மு.க ஒருபோதும் விட்டுக் கொடுக்காது எனவும் 2026 தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் பல கட்சிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணியிலிருந்து SDPI அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.

இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக ஆளுங்கட்சியான திமுகவும் தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரித்து மண்டல பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆ.ராசா, தங்கம் தென்னரசு, கனிமொழி சக்கரபாணி, செந்தில் பாலாஜி, நேரு, வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் மண்டல பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். களத்தில் திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வரும் மண்டல பொறுப்பாளர்கள், திமுக எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள், கட்சிக்குள் ஏதேனும் கோஷ்டி பூசல் உள்ளதா? என கேட்டறிகின்றனர்.


