கே.என்.நேருவை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரால் பரபரப்பு

 
ச் ச்

புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக வடக்கு மாவட்ட BLA & BDA கூட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு, அமைச்சர் ரகுபதி, அமைச்சர் மெய்யநாதன் ஆகியவர்களை வழிமறித்த திமுக வட்டச் செயலாளர் மற்றும் திமுகவினர் திமுக மாநகர பொறுப்பாளரை மாற்ற வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக மாநகர செயலாளராக இருந்த செந்தில்குமார் கடந்த டிசம்பர் மாதம் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். மேலும் அவர் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதியின் கணவர். இந்நிலையில் அவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவர் வகித்து வந்த திமுக மாநகரச் செயலாளர் பதவி இன்று வரை காலியாக இருந்தது.

இந்நிலையில் இந்த மாநகர செயலாளர் பதவிக்கு திமுக கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகள் பலர் திமுக கட்சி தலைமையிடம் தங்களுக்கு அந்தப் பதவி தர வேண்டும் என்று தங்களது ஆதரவாளர்களோடு கேட்டுக் கொண்டிருந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லாவின் ஆதரவாளரான ராஜேஷ் என்பவரை திமுக கட்சி தலைமை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாநகர பொறுப்பாளராக அறிவித்தது. மேலும்  மாநகரப் பொறுப்பாளராக அறிவித்துள்ள ராஜேஷ் புதுக்கோட்டை திமுக தொண்டரணி பொறுப்பில் இருந்தார். இந்நிலையில் கட்சிக்காக உழைத்த பல மூத்த உறுப்பினர்கள் திமுகவில் உள்ள நிலையில் இந்த பொறுப்பை ராஜேஷுக்கு வழங்கியதற்கு கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு கடந்த மூன்று மாத காலமாக எங்கு திமுக கூட்டம் நடந்தாலும் அங்கு புதுக்கோட்டை மாநகராட்சி வட்டச் செயலாளர்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து மாநகர பொறுப்பாளர் ராஜேஷை மாற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர். 

இந்நிலையில் தான் இன்று புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பால்பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக வடக்கு மாவட்ட BLA & BDA கூட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு, அமைச்சர் ரகுபதி, அமைச்சர் மெய்யநாதன் ஆகியவர்களை வழிமறித்த திமுக வட்ட கழக செயலாளர்கள் மற்றும் திமுகவினர் திமுக மாநகர பொறுப்பாளரை மாற்ற வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை சமாதானப்படுத்திய அமைச்சர்கள் உள்ளே வாருங்கள் பேசிக் கொள்ளலாம் என்று தெரிவித்த நிலையில் மூன்று மாத காலமாக இதையே தான் சொல்கிறீர்கள் தீர்வு இல்லை என்று அதிருப்தியை அமைச்சர்கள் முன்னிலையில் வெளிப்படுத்திய திமுகவினர் உடனடியாக மாநகர பொறுப்பாளர் ராஜேஷை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களது கோரிக்கைகளை வலுவாக முன்வைத்து கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்குள் சென்றனர்.