“எல்லாவற்றையும் செய்துவிட்டு பின்பு வீட்டுக்குப்போய் ட்வீட் போடுவது”- விஜய்யை சீண்டிய திமுக வழக்கறிஞர்

 
DMK paranthaman

முதலமைச்சர் விஜய் தான் உருவக்கேலி செய்யவில்லை என விளக்கமளித்ததற்கு திமுக வழக்கறிஞர் பரந்தாமன் பதில் அளித்துள்ளார்.


இதுதொடர்பாக பரந்தாமன் தனது எக்ஸ் தளத்தில், “சட்டப்பேரவையில் உடல் மொழிக்கு வேலையில்லை! உரையாற்றுவது தான் உங்கள் வேலை மாண்புமிகு விஜய் அவர்களே! எல்லாவற்றையும் செய்துவிட்டு பின்பு வீட்டுக்குப்போய் #tweet போடுவது இன்னும் நீங்கள் மாண்புமிகு ஆகவில்லை என்பதையேக் காட்டுகிறது.  முதல்முறையாக நீங்கள் செய்திருந்தால் உங்களின் இந்த விளக்கத்தை உண்மையென மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.  ஆனால் தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றில் யாரும் இதுவரை செய்திராத கீழ்த் தரமான செயலை நீங்கள் முதல்வர் பொறுப்பை ஏற்றப்பிறகு இது இரண்டாவது முறையாக செய்திருக்கிறீர்கள். எனவே வேண்டும் என்றே திட்டமிட்டு உள்நோக்கத்துடன் தியாக வரலாற்றுக்கு சொந்தமான தலைவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்திருக்கிறீர்கள். உழைப்பைத்தந்து, தியாகத்தை தந்து இந்த முதல்வர் பொறுப்புக்கு பல காலம் மக்கள் பணியாற்றிய பின் வந்திருந்தால் இதன் வலிமையை உணர்ந்திருப்பீர்கள்.

ஊதாரித்தனமான வசனங்கள் பேசி வலைதள பொய் பரப்புரை மூலம் பதவிக்கு வந்ததால் முதல்வர் பொறுப்பின் மாண்பும், சட்டமன்ற மாண்பும் இன்று தங்களால் கூனிக்குறுகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் தலைகுனிந்துள்ளனர். காவல்துறை மானியத்தின் பதிலுரையில் பதிலே இல்லாத பதிலுரையை அளித்த வரலாற்றைப்படைத்த முதல்வர் தாங்கள். எதிர்காலத்தில் சட்டமன்ற நடவடிக்கைகளை அறிந்துக்கொள்ள குறிப்புகளை படிக்கயிருக்கும் அடுத்த தலைமுறையினருக்கு நீங்கள் பதில் அளிக்கத்தெரியாத பொம்மை முதல்வர் என உங்களை நீங்களே பதிவிட்டுவிட்டீர்கள். எனவே பழிப்பதற்கும், திமுகவை குற்றம் சுமத்துவதற்கும் நேரத்தை வீணாக்காமல் மாண்புமிகு முதல்வர் என்னும் உயரிய பொறுப்புணர்ந்து பணியாற்றுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.