மிகுந்த வேதனை அளிக்கிறது....எதையும் பேசும் மன நிலையில் நான் இல்லை - திருச்சி சிவா பேட்டி

 
trichy siva

தனது வீட்டில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் மிகுந்த மன வேதனை அளிக்கிறது என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார். 

திமுகவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானவர் திருச்சி சிவா.   திமுகவின் மூத்த தலைவரும் தமிழக அமைச்சருமானவர் கே. என். நேரு.   இவர்கள் இருவரும்  திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். திருச்சி சிவா வீடு அமைந்திருக்கும் பகுதியில் புதிய விளையாட்டு திடல் திறக்கப்பட்டு இருக்கிறது.   இதை அமைச்சர்  கே. என். நேரு திறந்து வைத்திருக்கிறார்.   இந்த திறப்பு விழாவிற்கான கல்வெட்டில் திருச்சி சிவா எம். பியின் பெயர் இடம் பெறவில்லை.  இதனால் திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் நேருவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.   இந்நிலையில் இந்த நிலையில் திமுக எம்பி திருச்சி சிவாவின் வீட்டில் சிலர் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.   இந்த தாக்குதலில் திருச்சி சிவா வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருக்கிறது.  வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. அமைச்சர் நேரு ஆதரவாளர்களுக்கும் திருச்சி சிவாவின் ஆதரவாளர்களுக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்ததால் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இதற்கிடையில், அமைச்சர் கே.என்.நேருவின் காரை மறித்த சிவாவின் ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் போலீஸ் ஸ்டேஷனில் அடைத்துவைக்கப்பட்டிருந்த அவர்கள் மீது, நேரு ஆதரவாளர்கள் காவல்நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

nehru


   
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான தனது வீட்டை திருச்சி சிவா இன்று பார்வையிட்டார். பின்னர், திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசியதாவது: நடந்த செய்திகளை நான் ஊடங்கள் வாயிலாகவும் சமூகவலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்துகொண்டேன். இப்போது நான் எதையும் பேசும் மனநிலையில் இல்லை. கடந்த காலத்திலும் நிறைய சோதனைகளை சந்தித்துள்ளேன். நான் அடிப்படையில் ஒரு முழுமையான அழுத்தமான கட்சிக்காரன். என்னைவிட என் கட்சி முக்கியம் என்பதால் பலவற்றை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. யாரிடமும் சென்று புகார் அளித்ததும் இல்லை. தனிமனிதனை விட இயக்கம் பெரிது என்ற தத்துவம் அடிப்படையில் வளர்ந்தவன். அப்படித்தான் இத்தனை நாட்களும் இருந்தேன். இப்போது நடந்துள்ள நிகழ்ச்சி மிகுந்த மன வேதனை தந்துள்ளது. வீட்டில் உள்ள உதவியாளரிடம் நான் பேச வேண்டும். நான் ஊரில் இல்லாதபோது அவர்கள் எல்லாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நான் இப்போது எதையும் பேசும் மன நிலையில் இல்லை. இவ்வாறு கூறினார்.