விருப்ப பட்டியலை காங்கிரஸ் வழங்கவில்லை - டி.ஆர்.பாலு

 
tr

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. டி.ஆர்.பாலு தலைமையிலான 5 பேர் கொண்ட குழு காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தின. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது

Image

இந்நிலையில் காங்கிரஸ் உடன் நடத்திய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளரும், தொகுதிப் பங்கீடு குழு தலைவருமான டி.ஆர்.பாலு, “திமுகவுடனான நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை திருப்தி அளித்துள்ளது. பாஜக மற்றும் அதிமுகவை தோற்கடிப்பது குறித்தும், 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது குறித்தும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. விருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை. மக்களவை தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது. 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக நிற்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.

I.N.D.I.A கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியதால் எந்தவித பின்னடைவும் ஏற்படவில்லை. I.N.D.I.A கூட்டணியின் வளர்ச்சிக்காக நிதிஷ்குமார் கூறிய திட்டங்கள் எதுவும் இல்லை. இந்தி பேச வேண்டும் என்ற ஒன்றரை மட்டுமே நிதிஷ் குமார் முன்னிறுத்தினார். நிதிஷ்குமார் பல தடைகள் ஏற்படுத்தியும் கூட்டணியில் இருப்பதால் அமைதியாக இருந்தோம். பிரதமர் வேட்பாளராக வர வேண்டும் என நிதிஷ்குமார் தெரிவிக்கவில்லை.

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைய உள்ளதா என்ற கேள்விக்கு தெரியவில்லை என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேட்டியளித்தார்.