டி.ஆர்.பி.ராஜா சிறப்பாக பணியாற்றி தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் - டி.ஆர்.பாலு பேட்டி

 
tr balu

சிறப்பாக பணியாற்றி முதல் அமைச்சரின் நன்மதிப்பை டி.ஆர்.பி.ராஜா பெறவேண்டும் என்பதே எனது விருப்பம் என அவரது தந்தை டி.ஆர்.பாலு கூறியுள்ளார். 
 
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.  கடந்த மே தேதி 7 இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் திமுக அரசு காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அந்த வகையில் முதல்வர் பரிந்துரையின் பேரில் அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார்.  அதே சமயம் திமுக பொருளாளரும்,  மூத்த தலைவருமான டி.ஆர். பாலுவின் மகனும் , மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி. ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா பதவி ஏற்றுள்ளார். டி.ஆர்.பி. ராஜாவுக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணமும்,  ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  இதை தொடர்ந்து ஆளுநர் ரவியுடன் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு டி.ஆர்.பாலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;  அமைச்சராக பதவியேற்றுள்ள மகன் டி.ஆர்.பி.ராஜா சிறப்பாக பணியாற்றி தமிழகத்தை முன்னேற்ற வேண்டும். சிறப்பாக பணியாற்றி முதல் அமைச்சரின் நன்மதிப்பை டி.ஆர்.பி.ராஜா பெறவேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.