பலியான அப்பாவி மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மூடி மறைக்க பார்க்கிறதா தவெக அரசு?- கனிமொழி

 
Kanimozhi

கோவை கல்லூரி மாணவர் கொலையைச் செய்தவர்கள் மட்டுமின்றி, பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறையினரையும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

ச்

கோவை தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவர் அமுதனை சக மாணவர்களுடன் சேர்ந்து அடையாளம் தெரியாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் உயிரிழந்திருப்பதாக  செய்திகள் வெளியாகியுள்ளது. கல்லூரியில் பயிலும் சக மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாடு குறித்தும், அதனை விற்பனை செய்யும் கும்பல் குறித்தும் அமுதன் காவல்துறையிடம் தகவல் தெரிவித்ததன் காரணமாகவே அவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இவ்விவகாரத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமுதனின் மரணத்திற்கு நீதிக்கேட்டு சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 


இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “கோவையில் தனியார் கல்லூரியில் படித்துவந்த முதலாம் ஆண்டு மாணவர், போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவித்ததற்காகப் போதை பழக்கத்தில் ஈடுபட்ட மாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில், அதை மாணவர்கள் இடையேயான கோஷ்டி மோதல் என்று திசைதிருப்பும் வகையில் வழக்கை முடித்து வைக்கப்பார்க்கிறது தவெக அரசு. கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் அளித்த பின் பாதுகாக்கத் தவறியதால் தான், அம்மாணவர் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் கூறும் நிலையில், பலியான அப்பாவி மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? இந்தக் கொலையைச் செய்தவர்கள் மட்டுமின்றி, பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறையினரையும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.