வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி

 
kanimozhi

திருவள்ளுவரைப் பற்றி அடிப்படை புரிதலே இல்லை என்ற வகையில் ஆளுநரின் பேச்சு உள்ளது என  திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

Kanimozhi

காவி உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து திருவள்ளுவர் தின வாழ்த்துகளை கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். 

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுக எம்பி கனிமொழி, “மதத்தின் அடையாளங்கள் திருக்குறளில் கிடையாது. திருவள்ளுவர் எந்த மதத்திற்கும் சொந்தம் இல்லை. எந்த சனாதனத்துவத்தையோ, இந்துத்துவத்தையோ, எந்த மதத்தையுமே அவர் மீது திணிக்கக் கூடாது. திருக்குறள் மற்றும் திருவள்ளுவரைப் பற்றி அடிப்படை புரிதலே இல்லை என்ற வகையில் ஆளுநரின் பேச்சு உள்ளது. வள்ளுவரின் நிறம் மனிதநேயம்தான். வேண்டுமென்றால் வள்ளுவருக்கு கருப்பு நிறம் போடலாம். மதத்தின் அடையாளம் திருக்குறளில் இல்லை. வள்ளுவரின் நிறம் மனிதநேயம் தான். திருவள்ளுவர் மீது இந்துத்துவாவை திணிக்க முடியாது” என்றார்.