திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை: கனிமொழி
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு தொடர்பாக முதலமைச்சர் பேசி முடிவெடுப்பார் என மதுரையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேட்டியளித்தார்.

திமுக சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துக் கேட்பு கூட்டம் கனிமொழி எம்.பி தலைமையில் மதுரை பாண்டி கோவில் ரிங் ரோட்டில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மூர்த்தி, தங்கம் தென்னரசு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கோவி.செழியன் மற்றும் திமுக தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துக்களை கோரிக்கை மனுக்களாக பெற்றுக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி , “மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் என்பதால் பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையை கேட்டு வருகிறோம்.
திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் முடிந்தவரை நிறைவேற்றுவார்கள். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு தொடர்பாக காங்கிரஸ் உடன் முதலமைச்சர் பேசி முடிவெடுப்பார். முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு செய்யவில்லை, எய்ம்ஸ் காலதாமதம் ஆவதற்கு திமுக அரசே காரணம் என அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார். அண்ணாமலை கனவு உலகத்தில் உள்ளார், ஏதுவாக இருந்தாலும் ஒன்றிய அரசு நிதி வழங்குவதில்லை. பல காரணங்களுக்காக திட்டங்களை நிறுத்துகிறார்கள். இந்த சூழலில் எந்த ஒரு ஆதமரமில்லாமல் தமிழக அரசாங்கம் மீது கண்மூடித் தனமாக பழி சுமத்துகிறார்,அவர் உண்மை என்னவென்று தெரிந்து கொண்டு பேச வேண்டும்.பத்திரிக்கையாளர்களை பார்த்தால் எது வேண்டுமானாலும் பேசலாம் என்பது நியாயமாக இல்லை. இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனையை எத்தனை ஒன்றிய அமைச்சர்கள் ஆய்வு செய்து உள்ளார்கள்?
தேர்தல் கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு கோரிக்கை உள்ளது. அந்த கோரிக்கைகளைப் பறித்து விட்டு அறிக்கையாக வெளியிடுவோம். அண்ணாமலை பாவம்... அரசியலில் இருந்தே ஒதுங்கிவிட்டேன் என்று சொல்கிறார். அவரை ஏன் வம்பிளித்துக் கொண்டுள்ளீர்கள். திமுக ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளார்களா? என்று சொல்ல சொல்லுங்கள். பிரதமர் மோடியை எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்யச் சொல்லுங்கள்” என்றார்.


