திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாவாக மாற்ற பாஜக முயற்சி- கனிமொழி

 
கனிமொழி கனிமொழி

திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாவாக மாற்றிவிட வேண்டும் பாஜகவும் அதன் கூட்டணியும் முயற்சிப்பதாக திமுக எம்பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “திருப்பரங்குன்றத்தில் பல நூற்றாண்டுகளாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மக்கள் கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் சிக்கந்தர் தர்காவிற்கும் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் விதமாக மக்களிடையே மத குரோதத்தை உருவாக்கக்கூடிய விதமாக தேவையில்லாமல் சிலர் பிரச்னைகளை உருவாக்குகின்றனர். மக்களுக்குச் செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் தமிழ்நாடு அரசு சரியாக செய்து கொண்டிருக்கிறது. கார்த்திகைத் தீபம் தொடர்ந்து ஏற்றப்படுகிறது. கோவில் நிர்வாகமும் அறநிலையதுறையும் சேர்ந்து கார்த்திகைத் தீபத்தை மலைமீது இருக்கும் பிள்ளையார் கோவிலில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன் வழக்கமாக மலை அடிவாரத்தில் இருக்கும்  கோவிலில் ஏற்றி கொண்டிருந்தார்கள். கோவில் மலைமீது  கட்டப்பட்ட பிறகு அங்கு அந்த தீபம் ஏற்றப்படுகிறது.

ஆனால் திடீரென்று எந்த மதத்திற்கும் சம்பந்தமே இல்லாத ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக்கல் (சர்வே ஸ்டோன்) மீது தீபத்தை ஏற்ற வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்து மதத்திற்கு எதிராக இந்து மக்களின் மனநிலையை புண்படுத்தும் வகையில் கோவிலுக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பிரச்சனைகளை உருவாக்குகின்றனர். ஏற்கனவே இந்த விசயத்தில் நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்கிவிட்டது. இப்பொழுது நீதியரசர் சுவாமிநாதன் அவர்கள் தேவையில்லாமல் தலையிட்டு அரசை மீறி ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார். தமிழ்நாடு காவல் துறையைத் தாண்டி, மத்திய காவல்படையைத் தீபம் ஏற்றுவோருக்குத் துணையாக அனுப்பிவைக்கிறார். இதை பயன்படுத்திக்கொண்டு பாஜக மத கலவரத்தை உருவாக்க நினைத்தது. பாஜகவைச் சேர்ந்தவர்கள் இதை இன்னொரு அயோத்தியாவாக மாற்றிவிட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அவர்களே இதை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பதிவு செய்கிறார்கள்

நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்பிய பொழுது, அமைச்சர் கிரண் ரிஜூஜு மூத்த உறுப்பினர் டிஆர் பாலு அவர்களைப் பார்த்து, நீங்கள் பேசுவது உங்களுக்கும் நல்லதல்ல உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல என்று மிரட்டக்கூடிய வகையில் எச்சரிக்கை விடுக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நேரமில்லா நேரம் என்பது உறுப்பினர்களின் நேரம். அவர்கள் தங்களது பிரச்சனைகளை முன்வைக்கக் கூடிய நேரம். ஆனால் அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அமைச்சர் எல்.முருகன் அவர்கள் தேவையில்லாமல் மிக நீண்டதொரு உரையை ஆற்ற அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவரும் பல பொய் பிரச்சாரங்களை முன்வைத்தார். தமிழ்நாடு அரசின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் காழ்ப்புணர்வை உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அவர் பேசினார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்தார்.