“கூட்டணியில் பழனிசாமிக்கு பேசக் கூடிய உரிமை கூட இல்லை”- கனிமொழி எம்பி

கூட்டணிக்கு தலைமை வகிப்பவர் தான் கூட்டணி பற்றி அறிவிக்க வேண்டும் ஆனால், இன்று பேசக் கூடிய உரிமை கூட எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி, “தமிழ்நாடு மக்களுக்கு இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக அதிமுக- பாஜக கூட்டணி அமைந்து இருக்கிறது. தேர்தலில் இந்த கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்றுத் தருவார்கள். பழனிசாமிக்கு பேசக் கூடிய உரிமை கூட இல்லாமல் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு கொண்டுவந்த மக்களுக்கு எதிரான பல்வேறு மசோதாக்களையும், திட்டங்களையும் எதிர்ப்பதாக சொன்னஅதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி்சாமி அவர்கள், உள்துறை அமித்ஷாவுடன் ஒரே மேடையில் மெளனமாக அமர்ந்து, பாஜக – அதிமுக கூட்டணியை ஆமோதித்து ஏற்றுக் கொண்டதை இன்று பார்க்க முடிந்தது. மறைந்த அண்ணா, ஜெயலலிதா அவர்களை எல்லாம் தரக்குறைவாக விமர்சித்த தலைவருடன் ஓரே மேடையில் அமர்ந்து கொண்டு, கூட்டணியை யாரோ ஒருவர் அறிவிக்க அதைக் கேட்டுக் கொண்டு அமர வேண்டிய நிலையில் எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டு இருக்கிறார். வழக்கமாக யாரோடு தமைமையில் கூட்டணி அமைகிறதோ அவர் தான் கூட்டணியை அறிவிப்பார். ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு பேசக் கூடிய உரிமை கூட இல்லாமல் கூட்டணி அறிவிக்கப்படுகிறது. தங்களது தலைவர்களை விமர்சித்தவர்களையே இன்று வீட்டிற்கு விருந்துக்கு அழைக்க வேண்டிய நிலைக்கும் அவர் தள்ளப்பட்டு இருக்கிறார். இப்படி தனது கட்சிக்கும், தமிழ்நாடு மக்களுக்கு செய்து இருக்கக் கூடிய மிகப் பெரிய துரோகம் இது.
வரும் தேர்தலில் இந்த கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்றுத் தருவார்கள். தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் பாஜகவுக்கும், ஒன்றிய அரசுக்கும் இன்று அதிமுக ரத்தின கம்பளத்தை விரித்து இருக்கிறது. இது தான் தமிழ்நாட்டுக்கு அதிமுக செய்து இருக்கக் கூடிய மிகப்பெரிய துரோகம். பாஜகவும், அதிமுகவும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள் என பலமுறை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூறி வந்தார்கள். இந்த கூட்டணி மீண்டும் உருவாகும் என்பதை பல முறை சுட்டிக் காட்டி இருந்தார்கள். அது இன்று உண்மை ஆகியிருக்கிறது. இது இன்று பட்டவர்த்தனமாக தெளிவாக தெரிய வந்திருக்கிறது. மக்களை வெகுநாள் ஏமாற்ற முடியாமல், கூட்டணியை இன்று வெளிப்படையாக அறிவிக்கக்கூடிய நிர்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். ” என்றார்.