தூய்மை பணியாளர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து வைத்த திமுக எம்.எல்.ஏ

 
mla

பிறந்த நாளை முன்னிட்டு தனது தொகுதி தூய்மை பணியாளர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து வைத்த முதலியார் பேட்டை திமுக எம்.எல்.ஏ. சம்பத்தின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி முதலியார்பேட்டையின் திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத். இவருக்கு கடந்த புதன்கிழமை (15-3-2023) அன்று பிறந்த நாள். சட்டமன்றத்தில் சபாநாயகர் முதல் அதிகாரிகள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். சட்டசபை நிகழ்வை முடித்துக் கொண்ட இவர், நேராக கடலூர் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு சென்றார். அங்கு 200 துப்புரவு பணியாளர்களுக்கு மதிய விருந்து அளித்தார். வசதி படைத்தவர்களுக்கு எந்த வகையில் உணவு வழங்கப்படுமோ, அதே மரியாதையுடன் உணவு வழங்க வேண்டும் என ஹோட்டல் நிர்வாகத்தை  கேட்டுக் கொண்டார். 

இதற்கான முழு செலவையும் ஏற்று கொண்ட எம்எல்ஏ, துப்புரவு பணியாளர்களை பலரும் மதிப்பதில்லை. கொரோனா காலத்தில் அவர்களது பணியை அளப்பரியது. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த மதிய உணவை அளித்திருப்பது மன திருப்தியாக உள்ளது என சம்பத் எம்எல்ஏ தெரிவித்தார். தங்களது பிள்ளைகள் கூட இது போன்ற ஹோட்டலுக்கு அழைத்து வரவில்லை என தெரிவித்த துப்புரவு பணியாளர்கள்,  பிறந்த நாளன்று எம்.எல்.ஏ மதிய உணவு அளித்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். 

இந்த ஓட்டலை  நிமிர்ந்து கூட பார்த்ததில்லை. ஆனால் குப்பை வாரும் எங்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் உணவு அளித்து நல்ல மரியாதை அளித்த சட்டமன்ற உறுப்பினருக்கு அனைத்து துப்புரவு பணியாளர்களும் நன்றி தெரிவித்தனர்.